கோவில் சொத்து பாதுகாப்பு: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

திருப்பூர்: ‘கோவில் சொத்துக்களை த.வெ.க., அரசு பாதுகாக்க வேண்டும்’ என, திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசினார்.

ஹிந்து முன்னணி சார்பில், கோவிலில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது:ஊழலை எப்படியெல்லாம் செய்யலாம் என்று கண்டுபிடித்தது தி.மு.க.,தான். தற்போது, பழனியில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்து, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிக்க திட்டமிட்டது அம்பலமானது. இதுதொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.

திருச்செந்துார், பழனி உள்ளிட்ட பல கோவில்களில் கோடிக்கணக்கில், பக்தர்கள் காணிக்கையால் வருமானம் வருகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க, இதை முழுமையாக பயன்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் ஏராளமான கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள கோவில்களை அரசு காப்பாற்ற வேண்டும். ஹிந்து கோவில்களின் சொத்து மட்டும் அரசிடம் உள்ளது. கோவிலை விட்டு, அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற வழக்கு உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Source link