கோவில் மற்றும் ஆதீனங்களுக்குச் சொந்தமான நிலங்களைச் சாகுபடி செய்து வரும் குத்தகை விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் விதிவிலக்கு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:
”விவசாயிகள் கோவில் மற்றும் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான நிலங்களைக் குத்தகைக்குப் பெற்று சாகுபடி செய்து முறையே குத்தகை செலுத்தி வருகின்றனர். கடந்த 2013 முதல் 2018 வரையிலான காலக்கட்டங்களில் ஏற்பட்ட வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக சாகுபடி செய்ய முடியாமல் குத்தகை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
அந்த காலக்கட்டத்திற்கான குத்தகை பாக்கியை நிலுவையாகக் காட்டி, வருவாய் நீதிமன்றங்கள் மூலமாக தமிழக அரசு நில வெளியேற்றம் செய்து கோவில் சொத்துகள் என்ற பெயரில் பதிவேற்றம் செய்துள்ளது.
கடந்த 2022-ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் கோவில் சொத்துகள் அபகரிப்பைத் தடுக்கவும், இணையதளத்தில் வெளிப்படையாக சொத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்யக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதி அரசர், கோவில் சொத்துகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டார்.
இதனை ஏற்று குத்தகை விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலங்களையும் கோவில் சொத்துகள் என்றே பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளை ‘நில அபகரிப்பாளர்கள்’ என்ற நிலைக்குத் தள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் தீர்வு காணப்படவில்லை. மாறாக, நிலங்களை ஏலம் விட்டு அதிகார வர்க்கம் அபகரிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக கொள்கை முடிவெடுத்து, குத்தகை விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் உரிய விதிவிலக்கு பெற்றுத் தர வேண்டும்.
அதுவரையிலும் குத்தகை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவும், கடன் மற்றும் உரங்கள் பெறவும் விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தடுத்து நிறுத்திட வேண்டும்” என்று பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சரின் உறுதிமொழி:
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ரமேஷ் கூறுகையில், ”ஏற்கென கரூர் இனாம் நிலம் குறித்த பிரச்சினையில் 40 நாட்களுக்குள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலங்கள் மக்களுக்கு சொந்தமாக்கப்பட்டது போல, தங்களின் கோரிக்கையையும் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். விரைந்து உரிய கொள்கை முடிவு எடுத்து, நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விதிவிலக்கு பெற்று விவசாயிகளைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
மேலும், காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ள விவகாரம் குறித்துப் பேசிய பி.ஆர்.பாண்டியன்,
“மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட கிராமங்களை அரசிதழில் வெளியிட்டுள்ள நிலையில், அதற்கான இழப்பீடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு முன் இந்த இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் சேருவதை உறுதி செய்யுமாறு வேளாண்துறை செயலாளரின் நேரடி பார்வையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். அதற்கு விரைவில் விவசாயிகளுக்குப் பணம் சென்றடைய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்” என்றார்.
இந்த சந்திப்பின் போது சென்னை மண்டல செய்தித் தொடர்பாளர் சைதை சிவா உடனிருந்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
