கோவையில் தேசிய அளவிலான கார் பந்தயம்: கோப்பையை தட்டிச் சென்ற பிரதீக் சோனாவனே

கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில்  நடைபெற்ற, சி.டி.ஆர், ஜே.கே டயர் எஃப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று மிகவும் பரபரப்பாக நிறைவடைந்தது. மொத்தம் 8 பந்தயங்கள் நடைபெற்றன.  எல்.ஜி.பி பார்முலா 4 பிரிவின் முதல் பந்தயத்தில் மெக்கோ ரேசிங் அணியின் துருவ் கோஸ்வாமி அபாரமாகச் செயல்பட்டு முதலிடத்தைப் பிடித்தார். 

மெஹுல் அகர்வால் மற்றும் ஆர்யா சிங் அடுத்தடுத்த இடங்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து பெய்த பலத்த மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாவது பந்தயம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் பாலா பிரசாத் முதலிடமும், அகர்வால் இரண்டாமிடமும், ராகுல் ரங்கசாமி மூன்றாமிடமும் பெற்றனர்.

ஜே.கே டயர் லெவிடாஸ் கோப்பை

ஜென்டில்மேன் பிரிவில் மும்பையைச் சேர்ந்த பிரதீக் சோனாவனே எளிதாக முதலிடம் வென்றார். சித்தார்த் பாலகசுந்தரம், வினித் குமார் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். ரூக்கி பிரிவில் இலங்கையின் ஆதம் ஜுனைத் வெற்றி பெற்றார். கடைசி நேரத்தில் நடந்த பெரும் மோதலுக்குப் பிறகு நடைபெற்ற இந்தியன் சூப்பர் டூரிங் கார்ஸ் பந்தயத்தில் பியான் பிதாஸ்வாலா முதலிடம் பிடித்தார். 

இந்திய டூரிங் கார்ஸ் பிரிவில் அமன் நாக்தேவ் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தார். ஜூனியர் டூரிங் கார்ஸ் பிரிவில் தீபக் ரவிகுமார் மற்றும் சூப்பர் ஸ்டாக் பிரிவில் தில்ஜித் டி.எஸ் ஆகியோர் வாகை சூடினர்.

எஃப்1300 நோவிஸ் கோப்பை

மெக்கோ ரேசிங் அணியின் ஷெட்டி இந்த வார இறுதியில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தினார். அகஸ்டின் பாபி இரண்டாவது இடத்தையும், ஆதம் ஜுனைத் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். நான்காவது இடத்திற்கான கடும் போட்டியில் ருத்விக் ரெட்டி வெறும் 0.004 வினாடி என்ற மயிரிழை வித்தியாசத்தில் யாஷ் விக்ரம் சிங்கை வீழ்த்தி அசத்தினார்.

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை

ப்ரோ பிரிவில் பெங்களூரைச் சேர்ந்த அனிஷ் ஷெட்டி முதலிடம் பிடித்து அசத்தினார். நவ்நீத் குமார் இரண்டாமிடத்தையும், செந்தில்குமார் மூன்றாமிடத்தையும் பெற்றனர். 

அமெச்சூர் பிரிவில் வதோதராவின் கபீர் சாஹோச் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்து முத்திரை பதித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஹரிஷ் யோதின் இரண்டாமிடத்தையும், செளரவ் சஞ்சய் தே மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.

Source link