கோவையில் மழைநீர் தேக்கமா?.. புகார் தெரிவிக்க இந்த எண்ணுக்கு அழையுங்கள்.. மாநகராட்சி அறிவிப்பு!

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் மழை நீர் தேங்கினாலோ, போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டாலோ பொதுமக்கள் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலமாக உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றவும், பொதுமக்களின் இயல்பான நடமாட்டத்தை உறுதி செய்யவும் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, JCB, Bobcat இயந்திரங்கள், சகதி உறிஞ்சும் லாரிகள், தண்ணீர் லாரிகள் மற்றும் மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு, தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல் மற்றும் வடிகால் அடைப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துணை ஆணையாளர்கள், மாநகரப் பொறியாளர், மாநகர நல அலுவலர், உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் களத்தில் நேரடியாக ஈடுபட்டு, மழையால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணித்து, முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) மூலம் சுரங்கப்பாதைகள் மற்றும் மண்டல, வார்டுப் பகுதிகளில் உள்ள CCTV கண்காணிப்பு அமைப்புகள் வாயிலாக நிலவரங்கள் கண்காணிக்கப்பட்டது. மழைநீர் தேங்குதல் அல்லது போக்குவரத்துப் பாதிப்பு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, தொடர்புடைய அலுவலர்கள் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மழைநீரை விரைந்து வெளியேற்றவும், தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மழைநீர் தேக்கம் மற்றும் மழை தொடர்பான பாதிப்புகள் குறித்து மாநகராட்சியின் உதவி எண் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பெறப்பட்ட 60 புகார்களும் உடனடி நடவடிக்கைகள் மூலம் முழுமையாகச் சரிசெய்யப்பட்டன. இதற்காக மழைநீரை வெளியேற்றுதல், வடிகால் அடைப்புகளை அகற்றுதல், நீரோட்டத்தைச் சீரமைத்தல் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் நீர்வழித் தொற்றுநோய்களைத் தடுக்கும் வகையில், தேங்கிய நீரை அகற்றுதல், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் மற்றும் சுகாதார விழிப்புணர்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் இம்முகாம்களில் பங்கேற்று உடல்நலப் பரிசோதனை செய்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலர்களும் பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மழையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான சேவைகளை வழங்கவும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மழைநீர் தேக்கம் மற்றும் மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களுக்கு: தொலைபேசி / வாட்ஸ்அப்: 8190000200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.