கோவையில் 18.4 செ.மீ., கொட்டி தீர்த்தது கனமழை; 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: ‘கோவையில் நேற்று 18.4 செ.மீட்டர் அளவுக்கு கொட்டி தீர்த்த நிலையில், இன்று, 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. சென்னை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த, 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில், அதிக பட்சமாக, 18.4 செ.மீ., அளவுக்கு மழை கொட்டித்தீர்த்துள்ளது.

இன்று..

இன்று, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் விழுப்புரம் உட்பட, 14 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும்.

நாளை..

நாளை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், மதுரை, திண்டுக்கல், துாத்துக் குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்., 22, 23 தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், மணிக்கு 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link