கோவை அவிநாசி சாலைக்கு வந்த விஐபி.. வாகனங்களுக்கு நடுவே சீறி பாய்ந்து செம சம்பவம்

கோவை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. மழை காலம் என்றாலே பாம்பு பூச்சிகளின் நடமாட்டம் இருப்பது வழக்கம் தான். கோவையில் கடந்த 10 நாட்களாக மழை பேயாட்டம் ஆடியது. பல பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவையின் முக்கிய பகுதியான அவிநாசி சாலையில், பட்டபகலில் நாக பாம்பு ஒன்று புகுந்தது. வாகனங்களுக்கு நடுவே சாலையில் படமெடுத்து நின்று சீறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கல்வி, மருத்துவம், தொழில்துறை என பல்வேறு பிரிவுகளில் கோவை முன்னேற்றமடைகிறது. ஆனால் அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதி செய்யப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை பொள்ளாச்சி சாலை, தடாகம் சாலை என அனைத்து பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை சரி செய்வதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. முறையான திட்டமிடலுடன் கட்டவில்லை. அதனால் போக்குவரத்து நெரிசல் குறையில்லை. திமுக ஆட்சியில் ஒரே ஒரு மேம்பாலம் மட்டுமே கட்டப்பட்டது. விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், ரயில் நிலையம் விரிவாக்கம், ஒருங்கிணைந்த பேருந்து முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது. உள்கட்டமைப்பு முடங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை கொட்டியது. இதனால் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் வேலைக்காக திருச்சி சாலை, அவிநாசி சாலை, காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பல பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அவிநாசி சாலையில் தமிழகத்தின் நீளமான மேம்பாலம் (10.10 கி.மீ) அமலுக்கு வந்தும் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையவில்லை. அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் அருகே நேற்று திடீரென சாலையில் ஒரு நாக பாம்பு வந்தது. வாகனங்கள் செல்ல செல்ல, நடு ரோட்டில் நின்று அந்த பாம்பு படம் எடுத்து நின்று சீறியது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக பாம்புகள் சாலை உடனடியாக கடந்துவிடும்.

ஆனால் அந்த பாம்பு காயமடைந்திருந்ததால் அதனால் வேகமாக நகர முடியவில்லை. பாம்பு கடித்துவிடுமோ என்கிற அச்சத்திலேயே பல வாகனங்கள் கடந்தன. பிறகு அந்த வழியாக சென்ற டேக்ஸி டிரைவர் ஒருவர் துணிச்சலுடன் பாம்பை மீட்டு, அருகில் உள்ள காலியிடத்தில் விட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாக பாம்பு அவிநாசி சாலையில் வந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.