கோவை மாணவன் மரணம்: சி.பி.சி.ஐ.டி விசாரணையில் யாரும் தப்ப முடியாது: வன்னி அரசு உறுதி

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பள்ளிகளில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் சாதியப் பாகுபாடுகளைக் களைய வேண்டியது அவசியம் என்றும், சி.பி.சி.ஐ.டி விசாரணையின் மூலம் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு, தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்வரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கோவைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அகிலனுக்கு வீர வணக்கம் செலுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏற்கெனவே மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.

நீதியரசர் சந்துரு அளித்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சட்டமன்றத்தில் பேசியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் வன்னி அரசு, பள்ளிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் சாதியப் பாகுபாடுகளைக் களைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். குறிப்பாக, பள்ளிகளில் சாதிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது என்பதே முக்கியமானதும் முதன்மையானதுமான இலக்கு என்றும், அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எவ்வளவு பெரிய சாதிப் பின்னணி இருந்தாலும், விசாரணையில் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இதில் யாரும் தப்ப முடியாது என்றும் உறுதிபடக் கூறினார்.

சம்பவம் தொடர்பாக முதல் நாளிலிருந்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர்களுடனும், காவல்துறை அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சென்னையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகத் தெரிவித்தார். குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்பதே தமது கோரிக்கையாக இருந்ததாகவும், அதையே தானும் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

இந்த விவகாரத்தில் ஒருபுறம் சில தகவல்கள் தெரிவிக்கப்படுவதும், மறுபுறம் அவை மறுக்கப்படுவதுமாக இருப்பதால் குழப்பங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடர்ந்து நடைபெறுவதன் மூலம் அனைத்து சந்தேகங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார். முழுமையான விசாரணை முடிந்த பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தான் அமைச்சராக இல்லாவிட்டாலும் நீதி கோரும் போராட்டக் களத்தில் நின்றிருப்பேன் எனக் கூறிய அவர், போராட்டக் களம் என்பது நீதியைப் பெறுவதற்கான இடம் என்றார். தற்போது அமைச்சரவையில் இருப்பதால், அரசின் உள்ளே இருந்து செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், இந்த விவகாரத்தில் எந்தப் பின்னடைவும் இல்லை என்றும் தெரிவித்தார். எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின்படி வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஏழு நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் போராட்டத்தில் தாங்களும் தொடர்ந்து பங்கேற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தங்களது விருப்பம் என்றார். பள்ளி, கல்லூரி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முதன்மையான கடமை என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசில் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பது மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்றார். ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் சாதியக் கட்டமைப்பை உடைப்பதற்குத் தொடர்ச்சியான போராட்டம் அவசியம் என்றும், எட்டு பேர் அமைச்சர்களாக வந்துவிட்டதால் மட்டும் சமூகத்தில் முழுமையான மாற்றம் ஏற்பட்டுவிடும் என நம்பவில்லை என்றும் தெரிவித்தார்.

சாதிய மற்றும் சனாதனக் கட்டமைப்புகளை எதிர்த்துப் போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சாதியப் பாகுபாடுகளைக் களையவும், சாதிய ஆதிக்கத்தை ஒழிக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். சமூகத்தில் சாதியப் பாகுபாடு முற்றிலும் களையப்படும் வரை சமூக விடுதலைக்கான போராட்டம் தொடரும் என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்

Source link