சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான காளீஸ்வரன் என்பவர் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், தனது ஆபாசமான, மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவுவதை கண்டறிந்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, பல்லாவரம் போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, சைபர் குற்றப் பிரிவின் உதவியுடன் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு… தமிழ்நாடு வளர்ச்சிக்கு 2-வது விமான நிலையம் கண்டிப்பாக தேவை: நிதி ஆயோக்
விசாரணையில் அந்தப் புகைப்படம் காளீஸ்வரன் கைப்பேசியில் இருந்து பதிவேற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு சங்கர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட காளீஸ்வரனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த காவல்துறையினர் தடயவியல் பரிசோதனைக்காக அவரது கைப்பேசியை பறிமுதல் செய்து ஆய்வு செய்துள்ளனர்.
அதில், சக மாணவிகள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் சில உறவினர்கள் உட்பட பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட பல ஆபாசப் படங்கள் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. மேலும், அந்தப் படங்களில் சில சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து, காளீஸ்வரன் கைது செய்யப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் தாம்பரத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
