சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைத்தரகருக்கு ரூ.100 கோடி தந்த வீரமணி!

சென்னை: சட்ட நடவடிக்கை பாயாமல் இருக்க, இடைத்தரகராக செயல்பட்ட தொழில் வர்த்தகர் பிரகாஷ் என்பவருக்கு, 100 கோடி ரூபாயை, தொழிலதிபர் வீரமணி, 85, வழங்கி இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, தொழிலதிபர் வீரமணி கைதாகி உள்ளார். உடந்தையாக இருந்ததாக, தோழி சாந்தி, 61, கணவர் மகேந்திர சிம்ஹன், 63 உட்பட, இதுவரை எட்டு பேர் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீரமணி உள்ளிட்டோர் மீதான குற்றங்கள் குறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வீரமணி வங்கி பண பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, ரியல் எஸ்டேட் தொழில் வர்த்தகரான பிரகாஷ் என்பவருக்கு, வீரமணி, 100 கோடி ரூபாய் அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது.

போலீசார் கூறியதாவது:

வீரமணி மகளின் நெருங்கிய நட்பு வட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழில் வர்த்தகர் பிரகாஷ் இருந்துள்ளார். இவருக்கு, வீரமணியின் குற்றங்கள் குறித்து நன்கு தெரியும். வீரமணி மீது சட்ட நடவடிக்கை பாயாமல் இருக்க, பிரகாஷ் இடைத்தரகர் போல செயல்பட்டுள்ளார்.

வீரமணிக்கு, சிறுமிகள் மீது நாட்டம் இருப்பதை அறிந்த அவரது தோழி சாந்தி, அதை சாதகமாக பயன்படுத்தி, 50 கோடி ரூபாய்க்கு மேல் பறித்துள்ளார். இவரால், 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் வீரமணிக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

வீரமணி, சிறுமிகளுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களைக் காட்டி, அவரது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை, தன் குடும்பத்தினருக்கு தர வேண்டும் என, சாந்தி மிரட்டி உள்ளார். இது பற்றி பிரகாஷிடம், வீரமணி மகள் தெரிவித்துள்ளார்.

பிரச்னை எல்லை மீறியதால், வீரமணி, சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள இரண்டு சொத்துக்களை விற்று, பிரகாஷுக்கு, 100 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதில், 24 கோடி ரூபாயை தன் வங்கி கணக்கில் பிரகாஷ் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த தொகையை முடக்கி உள்ளோம். பிரகாஷ் தற்போது வெளிநாட்டிற்கு தப்பி உள்ளார். அவரைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். பிரகாஷ் கைதானால் தான், எந்தெந்த போலீஸ் அதிகாரிகளுக்கு எவ்வளது தொகை தரப்பட்டது என்பது குறித்தும் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link