சுப. உதயகுமாரன்
இன்றைய உலகமய அமைப்பில் சந்தை மிகவும் முக்கியமானது. அதிகாரத் தளங்களுக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் சந்தையால்தான் திறக்கப்படுகின்றன, அல்லது மூடப்படுகின்றன. குடிமைச் சமூகத்துக்கு உண்மையாக இருந்து, அவர்கள் சொல் கேட்டு, அவர்களுக்காக வேலை செய்ய வேண்டிய அரசும், அரசு சார்ந்த அமைப்புக்களும் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் உள்நாட்டு முதலாளிகளுக்காகவும், பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவுமே வேலை செய்கின்றன. காரணம் அவர்கள்தான் அரசியல் நடத்த, அதிகாரம் பெற, அதனைத் தக்கவைக்க என அனைத்துக்கும் பொருளுதவி புரிகிறார்கள்.
குடிமைச் சமூகம் உரிமையாளராகவும், அரசு வேலையாளாகவும் இருக்க வேண்டிய உறவு இன்றைக்கு முற்றிலுமாக மாறி, பொருளுடையோர் உரிமையாளர்களாகவும் அரசு அவர்களின் வேட்டை நாயாகவும் இயங்குகின்ற அவலம் எழுந்திருக்கிறது. இந்தத் தகாத உறவை கேள்வி கேட்கும் குடிமக்கள் நக்சலைட்கள், மாவோயிஸ்ட்கள், தீவிரவாதிகள், தேசத்துரோகிகள், வெளிநாட்டுக் கைக்கூலிகள் என்கிற பல்வேறு பெயர்களில் வேண்டப்படாதவர்களாக, விரும்பப்படாதவர்களாகப் பார்க்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம்.
“காசேதான் கடவுளடா,” “வர்த்தகமே வழிப்பாதையடா” என்று மாறிப் போயிருக்கும் நம்முடைய உலகில், இராணுவ-தொழிலக-கல்விசார்-கார்ப்பரேட் கூட்டமைப்புத்தான் எங்கும் நிறைந்திருக்கும் ஏகாந்தவாசனாய்க் கோலோச்சுகிறது. கார்ப்பரேட் பணம்தான் கல்வி நிலையங்களின் ஆய்வுகளை வழிநடத்துகிறது. அந்த ஆய்வுகள் அனைத்தும் தொழில் வளர்ச்சியைப் பெருக்கவே உதவுகின்றன. அந்தத் தொழில் பெருக்கம் இராணுவத் தளவாடங்கள் மேன்மை பெறவும், வன்முறை ஆற்றல் வலுக்கவும் உதவுகின்றன. இந்த நச்சுவட்டம் நம்மை, நமது வளங்களை, சுற்றுச்சூழலை நசுக்கி அழித்துக் கொண்டிருக்கிறது.
இன்றைய உலகின் மிக முக்கியமான முடிவுகள் அனைத்துமே சில மேலைநாட்டுத் தலைநகரங்களில், மூடப்பட்ட கதவுகளின் பின்னே, எந்தவிதமான விவாதங்களுமின்றி சக்திமிக்கச் சிலரால் மட்டுமே எடுக்கப்படுகின்றன. “சந்தை-பணம்-தூய காஃபி” என்கிற மும்மை மகத்தானதாக ஆகிவிட்ட நிலையில், சந்தையின் பரந்துபட்ட இந்தச் செல்வாக்கு ‘தலைமைத்துவம்’ என்பதை ‘மேலாண்மை’ என்று உருமாற்றிக் கொண்டிருக்கிறது.
சந்தையின் பெருந்தலைவர்களே நம்முடைய அரசியல் தலைவர்களையும், சமூக-கலாச்சாரத் தலைவர்களையும் தேர்வு செய்கிறார்கள்; அவர்களைத் தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்து திறம்பட நிர்வகிக்கிறார்கள். சந்தைக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்பட்டுத்தான் மேற்படி தேசத் தலைவர்களும், சமூக-கலாச்சாரத் தலைவர்களும் இயங்க முடியும். மக்களுக்காக உழைக்கும் மக்கள் தலைவர்கள் போல வேடமிட்டுத் திரியும் இவர்கள் உண்மையில் கார்ப்பரேட் கைக்கூலிகள்.
நம்முடைய நவீன சமூக-பொளாதார-அரசியல் அமைப்பில் கார்ப்பரேட் தலைமை நிர்வாக அதிகாரிகள் தேசத் தலைவர்களைவிட, மத குருமார்களை விட, அனைவரையும் விட சக்தி வாய்ந்தவர்களாக, அதிகாரம் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அன்றாட நிர்வாக முடிவுகள் எடுத்தல் மற்றும் நிர்வாகப் பணிகளை மேலாண்மை செய்யும் மேலாளர்கள் தலைவர்களைவிட இன்றியமையாதவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள்.
வாரன் பென்னிஸ் (Warren Bennis) எனும் அறிஞர் தலைவருக்கும் மேலாளருக்குமான வேறுபாடுகளை அட்டவணையிடுகிறார்:
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர் மற்றும் மேலாளருக்கான வேறுபாடுகள் அடங்கிய ஒப்பீட்டு அட்டவணை:
| தலைவர் | மேலாளர் |
| புதியன புனைகிறார் | நிர்வாகம் செய்கிறார் |
| உருவாக்குகிறார் | பராமரிக்கிறார் |
| தோற்றுவிப்பவர் | பார்த்து பின்பற்றுபவர் |
| அசல் | நகல் |
| நம்பிக்கை தருகிறார் | கட்டுப்படுத்துகிறது / கட்டுப்படுத்துகிறார் |
| தொலைதூரப் பார்வை | குறுகியதூரப் பார்வை |
| மனிதரில் கவனம் | கட்டமைப்பில், முறையில் கவனம் |
| என்ன, ஏன் என்கிறார் | எப்படி, எப்போது என்கிறார் |
| அடிவானத்தைப் பார்க்கிறார் | அடிப்படையைப் பார்க்கிறார் |
| நடைமுறையை எதிர்க்கிறார் | நடைமுறையை ஏற்றுக்கொள்கிறார் |
| சுயேச்சையானவர் | பாரம்பரிய படைவீரர் |
| சரியான விடயங்களைச் செய்கிறார் | விடயங்களைச் சரியாகச் செய்கிறார் |
ஒரு தலைவர் என்ன செய்யப் போகிறோம், ஏன் அதனைச் செய்கிறோம் என்று தீர்மானிக்கிறார். ஆனால் ஒரு மேலாளர் எங்கே, எப்போது, எப்படி அதனைச் செய்து முடிப்பது என்றே செயலாற்றுகிறார். தலைவர் சுயேச்சையான மனிதர்களோடு புழங்குகிறார்; ஆனால் மேலாளரோ நிறுவப்பட்டிருக்கும் ஏற்பாட்டுக்குள் இயங்குகிறார்.
ஒரு மேலாளர் பல கீழ்நிலை உதவியாளர்களைப் பெற்றிருக்கிறார். அவரின் ஆணைகளைச் சிரமேற்கொண்டு அவர்கள் வேலை செய்கிறார்கள். வேலை-வெகுமதி என்கிற ஒரு பரஸ்பர பரிவர்த்தனையாகவே அவர்களின் உறவு அமைகிறது. மேலாளரும் இன்னொருவரின் கீழ்நிலை அதிகாரிதான். நேரம், பணம் போன்ற கட்டுப்பாடுகளால் நிர்வகிக்கப்படும் அவரும் மேலிருந்து வரும் ஆணைகளை, வேலைகளைக் கீழ்நோக்கித் தள்ளி விடுகிறார். மேலாளர்கள் பெரும்பாலும் நிலையான, வசதியான வாழ்க்கை வாழ்கிறவர்கள் என்பதால், தேவையற்ற துணிகரச் செயல்களையோ, தொந்திரவுகளையோ, சண்டை சச்சரவுகளையோ அவர்கள் விரும்புவதில்லை.
ஆனால் தலைவர்கள் தலைமைத்துவத்தோடு சிந்தித்து, முடிவுகள் எடுத்து, செயல்படும்போது அவர்களுக்கு கீழ்நிலைப் பணியாளர்கள் யாரும் இருப்பதில்லை. தலைமையேற்று நடத்துபவர்களுக்குப் பின்பற்றுபவர்கள் மட்டுமே இருக்கின்றனர். பின்பற்றுகிறவர்கள் மாத ஊதியத்துக்காக இயங்குபவர்களும் அல்லர்; வேலை போய்விடுமே என்கிற பயத்தோடு பணியாற்றுகிறவர்களும் அல்லர்.
“இதைச் செய்” என்று பணிக்கப்படுகிறவர்கள், கட்டாயப்படுத்தப்படுகிறவர்கள் உத்வேகத்துடன் உழைப்பதில்லை. ஒரு தலைவரால் உண்மையாக ஈர்க்கப்பட்டு, அவரைப் பின்பற்றுவதன் மூலம் தமது இதயம் விரும்புவதை அடைகிறோம் என்கிற உணர்வினைப் பெற்றிருக்கிறவர்களே உண்மையான ஈடுபாட்டுடன் உழைக்கிறார்கள். தம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை மறந்து, துறந்து, தலைவரின் கருத்துக்கள், திட்டங்கள் மீதான ஈர்ப்பால் துணிந்து களமிறங்குகிறார்கள் அந்தச் செயல்வீரர்கள்.
ஒரு தலைவர் மக்கள் தொடர்பில் சிறந்து விளங்குகிறார். தன் மீதான தொண்டர்களின் விசுவாசத்தைப் பெருக்கிக் கொள்கிறார். தவறுகளுக்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொள்ளும் அவர், சிறப்புகளுக்கான பெருமைகளைப் பிறருக்கு வழங்குகிறார். ஒரு தலைவர் மக்கள் தொடர்பைப் பேணிக் காத்தாலும், அவர் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நண்பராக இருக்கிறார் என்று அர்த்தமல்ல. தன் மீதான ஈர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள ஓர் இடைவெளியையும், தனிமையையும் அவர் பராமரிக்கிறார். மொத்தத்தில், “அணுகாது, அகலாது தீக்காய்வார் போல்” அவர் மக்களோடு பழகுகிறார். அப்படியானால் ஒரு தலைவர் பட்டும் படாமலும் இருக்கிறார் என்றும் அர்த்தமல்ல. தன்னுடைய கனவுகளுக்காக மற்றவர்களை உழைக்கச் செய்யும் வித்தையை அவர் அறிந்திருக்கிறார்.
ஒரு தலைவர் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்தாலும், உரக்கக் கத்தி ஊரைக் கூட்ட வேண்டிய தேவை அவருக்கு இல்லை. அவர் துணிகரமான வேலைகளைச் செய்கிறார். அதேநேரம், கண்களை மூடிக்கொண்டு முரட்டுச் சாகசங்களில் ஈடுபடுவதில்லை. பிறர் கவனமாகத் தவிர்த்துவிடும் வழிகளை மனமுவந்து தேர்ந்தெடுத்து, அவற்றைச் சமூக ஆதாயத்துக்கான வாய்ப்புக்களாக மாற்றும் வல்லமை கொண்டவர்தான் தலைவர்.
ஒரு தலைவருக்கும், ஒரு மேலாளருக்கும் இடையே இருக்கும் மிகப் பெரிய வேறுபாடு என்பது தங்களைப் பின்தொடர்பவர்களை, தங்களுக்காக வேலை செய்பவர்களை எப்படி ஊக்குவிக்கிறார்கள், உருவாக்குகிறார்கள் என்பதுதான். உண்மையைச் சொல்வதென்றால், ஒரு சிறந்த தலைவர் நல்ல மேலாளராகவும் இருந்தாக வேண்டும்; அதேபோல, ஒரு சீரிய மேலாளர் நல்ல தலைவராகவும் இயங்கியாக வேண்டும்!
ஒரு கார்ப்பரேட் பயிற்சியாளர் வெற்றிக்கான அளவுகோல்களையும், செயல்படுத்தும் வழிமுறைகளையும் பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். ஒரு மேசையின்மீது அகன்ற வாய்க் கொண்ட ஒரு கண்ணாடிக் குவளையை வைத்தார். அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த பெரிய கற்களைச் சுட்டிக்காட்டி எத்தனை கற்களை அந்தக் குவளைக்குள் போட முடியும் என்று பயிற்சி பெறுவோரிடம் கேட்டார். ஒவ்வொருவரும் ஓர் எண்ணைச் சொன்னார்கள். அவர் ஒவ்வொன்றாக 15 கற்களை உள்ளே போட்டார். “இந்தக் குவளை இப்போது நிரம்பிவிட்டதா?” என்று பயில்வோரிடம் கேட்டார்.
“ஆமாம், நிறைந்து விட்டது” என்று அனைவரும் ஏகோபித்த குரலில் பதில் சொன்னார்கள். அவர் உடனே குவளையைச் சற்றே குலுக்கி, பொடி ஜல்லிக் கற்களை அதனுள் போட்டார். மீண்டும் “இந்தக் குவளை இப்போது நிரம்பிவிட்டதா?” என்று கேட்டார். சுதாரித்துக்கொண்ட மாணாக்கர்கள் “இல்லை என்றே நினைக்கிறோம்” என்றார்கள் சற்றே குழப்பத்துடன்.
பயிற்சியாளர் இப்போது கொஞ்சம் மண்ணை அந்தக் குவளைக்குள் போட்டு நிரப்பினார். மீண்டும் “இந்தக் குவளை இப்போது நிரம்பிவிட்டதா?” என்று கேட்டார். பெரும்பாலானோர் உண்மையிலேயே குவளை நிரம்பி விட்டதாகவே எண்ணினாலும், வேறு என்ன தந்திரம் வைத்திருக்கிறாரோ என்று தயங்கி நின்றனர். இப்போது பயிற்சியாளர் நிறையத் தண்ணீரை குவளைக்குள் விட்டு நிரப்பினார். “இப்போது குவளை முழுவதுமாக நிரம்பிவிட்டது” என்று அறிவித்தவாறே, “இதிலிருந்து என்ன தெரிகிறது?” என்று கேட்டார் பயிற்சியாளர்.
“வாழ்க்கையில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், இன்னும் கொஞ்சம் வேலையைச் சேர்த்துக்கொண்டு செய்ய முடியும்” என்றார் ஒருவர். இன்னொருவர் நமக்கு எவ்வளவு நேர நெருக்கடிகள் இருந்தாலும், அதிக நேரம் எடுத்துக்கொண்டு அதிகமாக வேலைகளைச் செய்யலாம் என்றார். பிறிதொருவர் ஒரு நிறுவனத்தை நடத்துவோர் வருவாய் மற்றும் லாபம் உயரச் செய்வது, வாடிக்கையாளர் சேவை சிறக்கச் செய்வது, செயல்பாடுகளைச் செம்மையாக்குவது எனும் பெரிய கற்களை முதன்மையாகக் கருத வேண்டும் என்று விளக்கமளித்தார்.
வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விளக்கங்களைச் சொல்ல, பயிற்சியாளர் அறிவித்தார்: “இந்தச் செயல் விளக்கம் ஓர் எளிய உண்மையைத்தான் சொல்கிறது. அந்தப் பெரிய கற்களைக் குவளைக்குள் முதலில் போடாமலிருந்திருந்தால், அவற்றுள் ஒரு கல்லைக்கூட நாம் குவளையில் போட்டிருக்கவே முடியாது.” ஒரு சிறு நிறுவனமோ, அல்லது ஒட்டுமொத்தச் சமூகமோ, எதுவாக இருந்தாலும், ஜல்லி, மணல், தண்ணீர் போன்ற உருவில் சிறிதானப் பொருட்களைவிட, பெரிதானக் கற்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
மேலாண்மைத் தத்துவங்களைப் போதிக்கும் பீட்டர் டிரக்கர் சொன்னார்: “மேலாண்மை என்பது விடயங்களைச் சரியாகச் செய்வது, ஆனால் தலைமை என்பது சரியான விடயங்களைச் செய்வது.” ஆம், உலகச் சந்தையில் விடயங்களைப் பெரிதாகச் செய்வது மேலாண்மை என்றால், மக்கள் மந்தையில் பெரிய விடயங்களைச் செய்வது தலைமை!
(கட்டுரையாளர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்; பச்சைத் தமிழகம் கட்சியின் தலைமைப் பணியாளர்.)
