சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணா*விரதம் நிறைவு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி அமைப்பில் நிலவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, காக்கரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்போடு  சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் இணைந்து கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் சோனம் வாங்சுக் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 26 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் உப்பு மற்றும் தண்ணீரை மட்டுமே குடித்து போராடியதால் அவரது உடல்நிலை கடுமையாக மோசமடைந்தது. இதன் காரணமாக சுமார் 11 கிலோ வரை உடல் எடை குறைந்தது. 

இதையடுத்து, கடந்த18ஆம் தேதி (18.07.2026) டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்  தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குருகிராமில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இத்தகைய சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனம் வாங்சுக்கை, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பின் போது, “அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்தவித பழிவாங்கும் அல்லது சட்டபூர்வமான தண்டனை நடவடிக்கைகளும் எடுக்கப்படாது. டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியாகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்” என்றும் மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 

மேலும், தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்குவது குறித்து நேர்மறையாகப் பரிசீலிக்கப்படும். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க கடுமையான சட்டப்பிரிவுகள், விரைவு நீதிமன்றங்கள் அடங்கிய புதிய மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்றும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தது. இதனையடுத்து நேற்று (23.07.2026) நள்ளிரவு மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் சோனம் வாங்சுக் பழச்சாறு அருந்தி தனது 26 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். 

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், சோனம் வாங்சுக்  மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி, உடலைத் தேற்றி, மீண்டும் பழைய நிலையை (எடையை) பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே சமயம்  கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் தங்களது அமைதியான போராட்டம் தொடரும் என்று காக்கரோச் ஜனதா கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source link