சமூக நீதி விடுதி மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு; புதிய உணவுப் பட்டியலும் அமல்: தமிழக அரசு ஆணை

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மாதாந்திர உணவுப் படியை உயர்த்தித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்துள்ள தரமான உணவை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உணவுக்கட்டண உயர்வின் மூலம் பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான மாதாந்திர உணவுப் படி ரூ.1,400-லிருந்து ரூ.1,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, கல்லூரி விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்கான உணவுப் படி ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு விடுதிகள் மட்டுமன்றி, அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதி மாணவர்களுக்கும் இந்த உயர்வு பொருந்தும்.

இத்திட்டத்தின் வாயிலாக ஆதிதிராவிடர் நல விடுதிகளைச் சேர்ந்த 91,424 மாணவர்களும், பழங்குடியினர் நல விடுதிகளைச் சேர்ந்த 25,000 மாணவர்களும் என மொத்தம் 1,16,424 மாணவர்கள் நேரடியாகப் பலனடைவார்கள். இந்த கூடுதல் செலவினத்தைச் சமாளிக்கும் பொருட்டு, அக்டோபர் 2026 முதல் மார்ச் 2027 வரையிலான காலகட்டத்திற்கு ரூ.29.41 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

உணவுக் கட்டண உயர்வதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் உடலாரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விடுதிகளின் உணவுப் பட்டியலிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆட்டிறைச்சி, கோழிக்கறி, முட்டை, பால், கீரை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் அடங்கிய புதிய திருத்தப்பட்ட உணவுப் பட்டியல் இனி விடுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது விடுதி மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்து, அவர்களின் கல்வியிலும் நல்வாழ்விலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link