திருச்சி மாவட்டத்தில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவன ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறை பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது சக ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு மனு அளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் பீமநகர் கூனி பஜார் பகுதியைச் சேர்ந்த பிரதாப் (24) என்பவர், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சி விமான நிலையம் அருகே உள்ள ஜே.கே. நகர் பகுதியில் வசித்து வரும் சீனிவாசன் என்பவர், தனது வீட்டில் இணைய சேவைக்கான நெட்வொர்க் வயர் பழுதடைந்துள்ளதாக தெரிவித்து, அதை சரிசெய்ய பிரதாப்பை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரதாப் தனது சக ஊழியரான ஆசிக் அலியுடன் சேவைப் பணிக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் மது போதையில் இருந்ததாக கூறப்படும் சீனிவாசன் மற்றும் அவருடன் இருந்த சிலர், “தாங்கள் கூறிய நேரத்தில் ஏன் வரவில்லை, ஏன் தாமதமாக வந்தீர்கள்” எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த வாக்குவாதம் முற்றி, பிரதாப் மற்றும் ஆசிக் அலி ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக மருத்துவச் சான்றுகள், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ற கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யாமல், சாதாரண பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் உண்மை சம்பவத்தை மறைக்கும் வகையில் காவல்துறை செயல்படுகிறது என்றும், தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டித்து, பிரதாப், ஆசிக் அலி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன், அதே தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளிக்க திரண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதை விட, நேரடியாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து அனைவரும் அங்கிருந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று, சம்பவம் தொடர்பாக மறுவிசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். இந்த சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேரில் சிலர் காவல்துறையினரின் குடும்பத்தினருடன் தொடர்புடையவர்கள் என்பதால், காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்து, பாரபட்சமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
தொழில்நுட்ப சேவைக்காக சென்ற ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மட்டுமின்றி, அதனைத் தொடர்ந்து நீதியான சட்ட நடவடிக்கை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது, தனியார் தொலைத் தொடர்பு நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
