கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்துள்ள கெம்பனூர் பகுதியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் சிலர், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கடந்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா நகர் பகுதிக்கு அரசுப் பேருந்துகளை இயக்கவிடாமல் தடுத்து வந்தனர். இதனால் அண்ணாநகர் பகுதி மக்கள், எப்போதும் தங்களது பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து வந்தே பேருந்தில் ஏறி பயணிக்கும் நிலை இருந்துவந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், ஊடகங்கள் பலமுறை செய்திகளை வெளியிட்டும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
இதனிடையே, சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னியரசுவிடம் இந்த விவகாரம் கொண்டுபோகப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் அண்ணா நகருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், அமைச்சர்கள் வன்னியரசு மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கெம்பனூர் பகுதிக்கு வந்து அண்ணாநகர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் அண்ணா நகரில் இருந்து பொதுமக்களுடன் பேருந்தில் ஏறி கெம்பனூர் வரை சென்றனர்.
இதனைத் தொடர்ந்து வன்னியரசு மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் சம்பத்குமார், அண்ணா நகர் பகுதி மக்களின் நீண்ட கால போராட்டம் மற்றும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை பின்பற்றும் முதல்வர் எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவார் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னியரசு, கெம்பனூர் மக்களின் இந்த கோரிக்கை தொடர்பான மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறினார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதிக்கு பேருந்து செல்லாத நிலையில், கடந்த கால அரசுகள் எவ்வித கவலையும் இல்லாமல் அவர்கள் போக்கில் செயல்பட்டார்கள் என்றும், ஆனால் இன்று போகாத ஊருக்கும், போகாத பேருந்து செல்கிறது என்றால் அது மிகப் பெரிய சாதனை என்றும் தெரிவித்தார். இது ஒரு நல்ல முன்னெடுப்பு என்றும், தொடர்ந்து இது போன்ற செயல்களை செய்ய வேண்டும் என்று முதல்வர் தன்னை பாராட்டியதாகவும் அவர் கூறினார்.
மேலும், சமூக நல்லிணக்கமே இந்த அரசின் பிரதான செயல்பாடு என்று குறிப்பிட்ட அவர், இரண்டு அமைச்சர்கள் சேர்ந்து ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம் என்றால் அது இப்போது நடந்துள்ளது என்றார். நேற்று முதல்வர் சமூக நீதி விடுதியில் ஆய்வு செய்து அதிகாரிகளை எச்சரித்தது போல தங்களும் பணியாற்றுவோம் என்று கூறிய அமைச்சர், இனிமேல் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் அலட்சியமாக செயல்படுவதை விட்டுவிட்டு தீவிரமாகவும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அரசு அதிகாரிகள் மக்களுடைய சேவகர்கள் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் வன்னியரசு, அதிகாரிகள் சாதிய பாகுபாட்டுடனோ அல்லது அந்த கண்ணோட்டத்திலோ செயல்படுவார்கள் என்றால் அவர்கள் அரசுப் பணியில் நீடிக்க முடியாது என்று எச்சரித்தார். கடந்த காலங்களை விட்டுவிட்டு, இனிமேலாவது அதிகாரிகள் அவர்களாகவே அந்தந்த பகுதியில் பிரச்சனை இருந்தால் முன்வந்து அதனை களைய வேண்டும் என்றும், அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதனை தீவிரமாக செயல்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
