சாம்பியன் பட்டம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை அனஹத் சிங்; வரலாற்று சாதனை என பிரதமர் பெருமிதம்

புதுடில்லி: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை அனஹத் சிங் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஆன்டாரியோவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அனஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பைனலில் எகிப்து வீராங்கனை ருகையா சலீமை எதிர்த்து விளையாடிய அனஹத், 11-3,11-7, 11-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக மகுடம் சூடினார்.

இதன்மூலம், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். . முன்னதாக, 21 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா பைனல் வரை முன்னேறியிருந்தார். அதுமட்டுமில்லாமல், 2011ம் ஆண்டு முதல் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்களே வென்று வந்த நிலையில், தற்போது அதனையும் முறியடித்துள்ளார்.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அனஹத் சிங்கிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. அந்த வகையில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் அனஹத் சிங் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ்தளப் பதிவில்; உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற அனஹத் சிங்கை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். இந்தச் சாதனை இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link