சென்னை: ”சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல், பத்திரப்பதிவு செய்யும் வசதி விரைவில் அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்,” என, பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறினார்.
வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்யும் வசதி, ஆக., 17ல் அமலுக்கு வரவுள்ளது. இது தொடர்பான செயல் விளக்கம் மற்றும் கலந்தாலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
விரிவுபடுத்தப்படும் அதில், அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனை பத்திரங்களை மட்டும், சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல், எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யும் வசதி தற்போது விருப்ப அடிப்படையில் பயன்பாட்டில் உள்ளது.
இதை பத்திரப்பதிவு செய்வோர் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் மேம்படுத்தி வருகிறோம். ஆக., 17 முதல், இந்த வசதி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
இரண்டு வகை பத்திரங்களுக்கு மட்டும் இந்த வசதி கட்டாயமாக்கப்பட உள்ளது. விரைவில், அனைத்து வகை பத்திரங்களையும் சார் – பதிவாளர் அலுவலகம் வராமல் பதிவு செய்யும் வகையில் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய திட்டம் பதிவுத்துறை செயலர் குமரகுருபரன் பேசியதாவது:
மக்கள் தங்களுக்கு விருப்பமான இடத்தில், நேரத்தில் பத்திரப்பதிவு செய்ய, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக இத்திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணிகள், சென்னை ஐ.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பதிவுத் துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மைய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
‘ரூ.40 கோடி
லஞ்சம் கொடுத்தோம்!’
இந்த கூட்டத்தில், இந்திய தேசிய ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத் தரகர்கள் நலச்சங்கத்தின் தலைவர் விருகை கண்ணன் பேசியதாவது: தமிழகத்தில் புதிதாக வந்துள்ள அரசு, லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து செய்ய வேண்டும். கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், பத்திரப்பதிவு பணிகளுக்காக, 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து இருக்கிறோம். அதுபோன்ற சூழல், இந்த ஆட்சியில் வராது என்று நினைக்கிறோம். ஆனால், தற்போதும், திருச்சியில் ஒருசில அதிகாரிகள், கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு, நகர்ப்புற வழிகாட்டி மதிப்புகளை கடைப்பிடிக்கின்றனர். இதை சரி செய்ய, சில அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டம் முடிந்த பின், அமைச்சர் லோகேஷிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது: பதிவுத் துறையில் எந்த நிலையிலும் யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், ஒருசில இடங்களில் இதுபோன்ற புகார்கள் வருகின்றன. இத்தகைய புகார்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
