சாலையில் கிடந்த மின்கம்பி : பலரின் உயிரைக் காப்பாற்றிய மூதாட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் நேற்று (27.07.2026 –  திங்கள்கிழமை) மாலை மழை பெய்தது. மழை பெய்த நேரத்தில் தர்மர் கோயில் தெரு வழியாகக் கடைவீதிக்குச் செல்லும் சாலையில் உள்ள மரம் உடைந்து மின்கம்பிகளில் விழுந்தது. இதனால் மின்கம்பியில் தொய்வு ஏற்பட்டு சாலையில் கிடந்தது. அதோடு அந்த கம்பியில் மின்சாரம் வந்ததால் மின் விளக்குகள் எரிந்தது. 

இதனைப் பார்த்த அந்தப் பகுதியில் உள்ள ஒரு மூதாட்டி அந்த வழியாக ஏராளமானோர் செல்வார்கள் அதனால் ஆபத்து  ஏற்படும் என்பதை உணர்ந்து மழைக்குக் குடையைப் பிடித்துக் கொண்டு சாலையில் நின்று இரு பக்கமிருந்தும் வந்தவர்களை நிறுத்தி மின்கம்பி கிடக்கிறது கிட்டே (அருகே) போக வேண்டாம் என்று பல பேரின் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். அதே போல அந்த வழியாகச் சென்ற கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஜையும் அந்த மூதாட்டி நிறுத்தி மின் கம்பி கீழே கிடக்கிறது ஆனால் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்று சொல்ல உடனே முருகதாஜ் கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் கூறியுள்ளார். 

அதன் பின்னர் சிறிது நேரத்தில் மின் வாரிய ஊழியர்கள் வந்து மின் இணைப்பைத் துண்டித்து மின் கம்பியைச் சரி செய்தனர். சாலையில் மின் விழுந்து கிடந்த நேரத்தில் யாரும் ஆபத்தில் சிக்கிவிடக் கூடாது என்று கம்பியைச் சரி செய்யும் வரை மழையில் குடைபிடித்துக் கொண்டு சாலையில் நின்று அந்த வழியாக வந்தவர்களை நிறுத்தி பலரது உயிர்களைக் காப்பாற்றிய மூதாட்டியை மனதார பாராட்டலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Source link