சென்னை: வேளச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன், 47, உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
வேளச்சேரியைச் சேர்ந்த 30 வயது பெண், வேளச்சேரி நுாறடி சாலையில் இருந்து வீடு நோக்கி, கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேரில், பின்னால் அமர்ந்திருந்த நபர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் கூச்சல் போட்டதும், துாரத்தில் நின்ற கணவர் மற்றும் பகுதிமக்கள் சேர்ந்து, இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னால் அமர்ந்த நபர், ‘நான் இன்ஸ்பெக்டர் என்னிடமே தகராறு செய்கிறீர்களா’ என மிரட்டி, அங்கிருந்து இருவரும் சென்றுள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், உடனே வேளச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, வாகன எண்ணை வைத்து விசாரித்தனர்.
இதில், வேளச்சேரி, அண்ணா கார்டனைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மணிமாறன், என்பது தெரிந்தது. இவர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து, சட்டசபை தேர்தலின்போது, ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
அவ்வப்போது வீட்டுக்கு வரும் இவர், 26ம் தேதி இரவு பெயின்டரான மைத்துனர் மணி, 48, என்பவருடன் சேர்ந்து, மது அருந்தியுள்ளார். அதீத மதுபோதையில் வீட்டுக்கு புறப்படும்போது, பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று, மணிமாறன் மற்றும் அவரது மைத்துனர் மணி ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
