போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடிக்கச் சென்ற சம்பவத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் போதை மாத்திரை விற்பனை கும்பலின் மூளையாகச் செயல்பட்ட முக்கிய ரவுடி பூபாலனைப் பிடிக்க, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் ஒரு காவலர் கடந்த 18ஆம் தேதி இரவு 9 மணியளவில் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு நியூ பாலாஜி நகர்ப் பகுதிக்குச் சென்றனர். பூபாலன் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து அவரைப் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த ஒரு நபர் உதவி ஆய்வாளர் வெங்கடேசனைப் பின்புறமாகக் கத்தியால் சரமாரியாக வெட்டினார். பின்னர் 6 பேர் கொண்ட அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
காயமடைந்த எஸ்.ஐ வெங்கடேசன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரவுடி பூபாலன் மும்பை போன்ற வெளிமாநிலப் பகுதிகளில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து ஒரு நெட்வொர்க் அமைத்து விற்பனை செய்து வந்துள்ளான். போலீசாரிடம் மாட்டாமல் இருக்க செல்போன்களைப் பயன்படுத்தாமல், வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டுமே வியாபாரம் நடத்தியுள்ளான்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பா.ஜ.க பிரமுகரின் சகோதரர் விஜயகுமார் என்பவரை வீடு புகுந்து கொலை செய்த வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பூபாலன் மீது நிலுவையில் உள்ளன. தங்களைப் பற்றி போலீசாருக்குத் தகவல் கொடுப்பவர்களை மிரட்டுவதற்காக, பெண்கள் உட்பட பலரை வீட்டில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்துள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து, “போலீசுக்குக் காட்டிக் கொடுத்தால் உங்களுக்கும் இதே நிலைதான்” என மற்றவர்களுக்கும் அனுப்பி மிரட்டியுள்ளனர்.
இந்த கொடூர வீடியோ காட்சிகளையும் போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, முக்கிய ரவுடி பூபாலன் மற்றும் எஸ்.ஐயை கத்தியால் வெட்டிய தர்ஷன் ஆகிய இருவரையும் தற்பொழுது கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
