இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்திடம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீட்டெடுக்க ஆதரவளிக்குமாறு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்தாண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து உட்பட ஆறு நதிகளின் நீரை, பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், வட அமெரிக்க நாடான கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர் அவரை சந்தித்து பேசினார்.
அப்போது, இந்தியாவுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். நீரை இந்தியா ஆயுதமாக்குவதை எதிர்க்க வேண்டும் என்றும், அதற்கு கனடா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு கனடா பகிரங்கமாகவோ, கூட்டறிக்கையிலோ தன் ஆதரவை தெரிவிக்கவில்லை.
