2026 ஆம் ஆண்டுக்கான மண்டல அளவிலான CBRN போட்டி, ஆந்திரப் பிரதேசம், விஜயவாடாவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10-வது பட்டாலியனில் 12.10.2026 முதல் 15.10.2026 வரை நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு சிறப்பு காவல் 13-வது பட்டாலியன், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அணியினர் எஸ். மணிமாறன், துணைத் தளவாய் தலைமையில் இரண்டு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 17 காவலர்களுடன் பங்கேற்றனர். இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்றன.
இதில் தமிழ்நாடு சிறப்பு காவல் 13-வது பட்டாலியன், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அணியினர் முதலிடம் பிடித்து தமிழ்நாடு மாநில காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை முனைவரும் ஆயுதப்படை கூடுதல் காவல்துறை இயக்குனருமான ஆர். தினகரன், 22.10.2026 அன்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். உடன் எஸ். விஜயகுமாரும் நிகழ்வில் பங்கேற்றார்.
மேலும், இவ்வணியானது 02.11. 2026 முதல் 04. 11. 2026 வரை உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8-வது பட்டாலியனில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான CBRN போட்டியில் பங்கேற்க உள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற மண்டல அளவிலான மற்றும் தேசிய அளவிலான CBRN போட்டிகள் ஆகிய இரண்டிலும் தமிழ்நாடு சிறப்பு காவல் 13-வது பட்டாலியன், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அணி முதலிடம் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
