சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை சிறை

சென்னை: சென்னை, அசோக்நகர் அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிய, 58 வயது நபருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து, சென்னை ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அசோக்நகரை சேர்ந்த பாலு என்ற பால்ராஜ், 58. இவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லாததால், அதே பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, அவ்வப்போது பால்ராஜ் வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 27ல், பால்ராஜின் மனைவி, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிலையில், சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்த பால்ராஜ், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின், பால்ராஜ் வீட்டுக்கு செல்வதை சிறுமி தவிர்த்து வந்தார்.

ஏற்கனவே தன்னோடு ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்து உள்ளதாகவும், அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி, சிறுமியை மிரட்டி அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய், அசோக்நகர் மகளிர் போலீசில் அளித்த புகாரில், பால்ராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது. போலீசார் சார்பில் சிறப்பு பிளீடர் எஸ்.அனிதா ஆஜரானார்.

பால்ராஜ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி, நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு சாகும் வரை சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு இழப்பீடாக, 6 லட்சத்து, 1,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.

Source link