விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11ஆம் தேதி (11.10.206) இரவு தங்களது 7 வயது மகளுடன் பெற்றோர் வீட்டில் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை (12.10.2026) அவர்கள் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து சிறுமியை மீட்பதற்காக 3 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி தனிப்படையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள வயல்வெளிகள், கரும்புத் தோட்டங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தேடினர். எனினும், சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் போலீசார் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை (21.10.2026) உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில், காணமல் போன சிறுமி குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறுமியின் தாய் பவானி மற்றும் தந்தை வடிவேலிடம் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பாட்டியிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியின் வீட்டிலிருந்து மோப்ப நாய் சென்ற பகுதிகளிலும் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
