தேனி கிளைச் சிறையில் கடந்த 26ஆம் தேதி (26.10.2026) இரவு சுமார் 10 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த பாரா காவலர் ஸ்டாலின் பிரபு, கைதியின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக உள்ளே சென்றுள்ளார். அப்போது, அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்த கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களைப் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
இருப்பினும், காவலர்களைத் தாக்கிய கைதிகள், அவர்களிடமிருந்த சாவிகளைப் பறித்து, பிரதான நுழைவாயிலைத் திறந்து கொண்டு தப்பியோடியதாகச் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் வாகனத் தணிக்கை மற்றும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சிறப்புக் குழுக்களை அமைத்தனர். ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்படி 15 கைதிகள் பிடிபட்டனர். மேலும் இருவர் சரணடைந்தனர். இதன் மூலம் தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் பிடிப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் இயக்குநராக இருந்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சென்னை டான்ஜெட்கோ பிரிவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக பணியிடம் செய்யப் பட்டுள்ளார். அதே சமயம், அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த கே. சங்கர் சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஏ. கார்த்திக் வெளியிட்டுள்ளார்.
