தேனி கிளைச் சிறையில் நேற்று முன்தினம் (26.10.2026) இரவு சுமார் 10 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாரா காவலர் ஸ்டாலின் பிரபு, கைதியின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக உள்ளே சென்றுள்ளார். அப்போது, அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்த கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களைப் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
இருப்பினும், காவலர்களைத் தாக்கிய கைதிகள், அவர்களிடமிருந்த சாவிகளைப் பறித்து, பிரதான நுழைவாயிலைத் திறந்து கொண்டு தப்பியோடியதாகச் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் வாகனத் தணிக்கை மற்றும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சிறப்புக் குழுக்களை அமைத்தனர். ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் முதற்கட்டமாக, பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், லிங்க பிரசாத் உள்ளிட்ட 5 கைதிகள் பிடிபட்டனர். அதனைத் தொடர்ந்து, ட்ரோன்கள் மூலம் சிறையைச் சுற்றியுள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு, மேலும் 8 கைதிகள் கண்டறியப்பட்டுப் பிடிக்கப்பட்டனர். அதே போன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அதன்படி நேற்று முன்தினம் தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய நிலையில், போலீசார் அவர்களை அடுத்தடுத்து கைது செய்தனர்.
இந்நிலையில், தப்பியோடிய கைதிகளில் எஞ்சிய இருவரும் தற்போது பிடிபட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த சகோதரர்களான திருப்பதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் பிடிபட்டுள்ளளனர்.
