திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்றுகொண்ட போது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அத்தொகுதியின் நாதக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளருமான கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்ட 12 பேரை கடந்த 20ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தாராபுரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணக்கு வந்த போது கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இன்று (23-10-26) காலை கோவை சிறையில் இருந்து ஜாமீனில் கார்த்திகா விடுதலையானார். அவருக்கு நாம் தமிழர் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கார்த்திகா, “வெள்ளைக்காரனை எதிர்த்து பொருளாதார விடுதலை வேண்டும் என தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரனார் இருந்த கோவை மத்திய சிறைச்சாலை இது. இந்த சிறையில் பொய் குற்றங்களை சுமத்தி, ஆதாரமற்ற குற்றங்களை சுமத்தி எங்களை சிறையில் தள்ளிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு எங்களுடைய நன்றிகள்.
இத்தகைய வரலாற்று பெருமைமிக்க சிறைச்சாலையில் நாங்கள் இருந்தோம் என்பது எங்களுக்கு வாழ்நாள் பெருமை. இறுதிநாள் பரப்புரையில் முதலமைச்சர் விஜய் மட்டும் தான் பரப்புரை செய்ய வேண்டும், மற்ற கட்சி வேட்பாளர்கள் யாரும் பரப்புரை செய்யக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. வாக்காளர்கள் ஒவ்வொருக்கும் வாக்கு செலுத்துவதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே போல் வேட்பாளர்கள் எங்களுக்கும் வாக்கு கேட்பதற்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையை எப்படி மறுக்க முடியும்? இது ஜனநாயக மீறல் இல்லையா? நான் ஊழல் குற்றவாளி கிடையாது” என்று ஆவேசமாகப் பேசினார்.
