”சிறையில் தவிக்கும் ட்ரம்ப்?”; ஈரானில் விசித்திரமான காட்சி

கடந்த 10 மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரானிடையே போர் பதற்றம் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் ஏராளமான உயிர் இழப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

இந்த கடுமையான சூழலிலும், போர் முடிவிற்கு வந்ததாகத் தெரியவில்லை. அதே நேரத்தில், தற்போது இரு தரப்பிலும் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மீண்டும் இருதரப்பிற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அமெரிக்கா ஈரானை சீண்டும் நோக்கில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஒரு காட்சிப்படுத்துதலை மேற்கொண்டுள்ளது.  

அதன்படி,  தலைநகரில் தெஹ்ரானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தஜ்ரிஷ் சதுக்கத்தில் ஒரு பிரம்மாண்ட விளம்பரப் பலகைக்கு அருகே ஒரு சிறைச்சாலை கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. உண்மையான சிறைச்சாலை போலப் படுக்கை, கழிவறை, கைகழுவும் தொட்டி ஆகியவை உள்ள அந்தக் கூண்டுக்குள், டிரம்ப் போன்ற முகமூடி, விக் மற்றும் அவரது வழக்கமான கருப்பு உடை, சிவப்பு டை அணிந்த நாடகக் கலைஞர் ஒருவர் டிரம்பைப் போலவே வேடமிட்டு அங்கும் இங்கும் உலா வருகிறார். அவர் சிறைக் கம்பிகளைப் பிடித்தபடி தவிப்பது போலவும், சிறைக்குள்ளேயே படுத்து உறங்குவது போலவும் நடித்துக் காட்டுகிறார்.  

இந்த சிறைக் கூண்டின் பின்னணியில் உள்ள மின்னணுத் திரையில், அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் காட்சிகள் மற்றும் அமெரிக்காவின் போர்க் குற்றங்களை விமர்சிக்கும் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. குறிப்பாக, தெற்கு ஈரானில் திருமண விழா ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டிரம்பே காரணம் எனவும் ஈரான் குற்றம் சாட்டுகிறது.  

கடந்த புதன்கிழமை (21-10-26) அன்று அமைக்கப்பட்ட இந்த விசித்திரமான சிறைக் காட்சியை, அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்து, தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.