சிவகங்கையில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் நேற்று வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது வீடியோக்கள் அதிகம் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு, இளைஞர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதுகுறித்து காணலாம்.
சிவகங்கையில் நேற்று பிரபல ரவுடியான சுள்ளான் மதன் மர்மக் கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது பக்கத்தில் ரவுடியான சுள்ளான் மதன் பயங்கர ஆயுதங்களுடன், தனது ஆதரவாளர்களுடனும் பல ரீல்ஸ்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ரீல்ஸ்களுக்கு பல இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்று அறியப்படும் 2K கிட்ஸ், GEN Z இளைஞர்களும் கமெண்டில் அவருக்கு ஆதரவு தெரிவித்தும், அவரைக் கொண்டாடியும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஜாமீனில் வெளிவந்தவர் கொலை
சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (எ) சுள்ளான் மதன். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சுள்ளான் மதன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், நேற்று பக்கத்து கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண சுள்ளான் மதன் சென்றிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், சுள்ளான் மதனைச் சுற்றி வளைத்து, விடாமல் விரட்டிச் சென்று கருப்புத் தோட்டத்தில் வைத்து அவரைச் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த சுள்ளான் மதன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கையில் கத்தி மாஸ் பிஜிஎம்
ஆளுயர மாலை அணிந்து பிறந்த நாள் கொண்டாட்டம், பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கேக் வெட்டி ஊட்டுவது, நீதிமன்றத்தில் ஸ்லோ மோஷனில் வெளிவருவது, சிறுவர்கள், இளைஞர்கள் என அவர்களது மத்தியில் நின்று, கத்தி தூக்கிக் காட்டுவது, கோர்ட் வாசலில் இருந்து வெளிவருவது போன்ற அனைத்திலும் தனது ரவுசத்தை ரீல்ஸ்களில் பெருமிதமாகவும் அதனைக் கொண்டாடும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்த 24 வயது இளைஞர்தான் சுள்ளான் மதன்.
குவியும் இளைஞர்கள் அஞ்சலி – காரணம்
சுள்ளான் மதன் அவரது ஊரில் மட்டுமின்றி, சமூக வலைதளம் மூலம் பிரபலமான ரவுடியாக அறியப்பட்டார் எனக் கூறப்படுகிறது. இவர் தனது பக்கத்தில் பகிரும் ரீல்ஸ்கள் மூலம் இவரைச் சுற்றி சிறுவர்கள் மற்றும் அவரது ஒத்த வயதுடைய இளைஞர்கள் அவரைப் பின்தொடரத் தொடங்கியுள்ளனர். மேலும் இதில் பலரும் சுள்ளானின் ரவுடித்தனத்திற்கும் அவரது செயல்களுக்கும் ஒருவித பெருமையான ஆதரவு மனப்பான்மை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏன் இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்
சமூக வலைதளங்களில் ஆயுதங்கள், நெருப்பு போன்ற வன்முறையைத் தூண்டும் பொருட்கள் இடம்பெறக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இதுபோன்ற வீடியோக்கள் நிறைய பகிரப்படுகின்றன. இதனால் தற்போதைய இளைஞர்கள் இந்த மாஸ் பிஜிஎம் போட்டு பரவும் வீடியோக்கள் மூலமும், சுள்ளான் மதன் போன்றவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு மூலமும் ஈர்க்கப்படுகின்றனர். எனவே இதுபோன்று கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளை முடக்கி, அவர்களைக் கண்காணிக்கவும் பகிரப்படும் வீடியோக்களை நீக்கவும் அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Source link
