சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண வந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன், மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த மதன் மீது பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரட்டைக் கொலை வழக்கிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த மதன், இன்று ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் மதனை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார், மதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண வந்த பிரபல ரவுடி விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
