சிவகாசியில் மீண்டும் சோகம்… பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி குடோனில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த திடீர் வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகவும், வெடிவிபத்தால் குடோனின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்து, கரும்புகை வானத்தை மூடியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விபத்து ஏற்பட்ட உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் உயிர் தப்பிக்க அங்கும் இங்கும் அலறியடித்து ஓடிய நிலையில், அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தண்ணீரைப் பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியேற்றினர்.

இந்த கோர விபத்தில் இரண்டு பேர் பலத்த தீக்காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பல தொழிலாளர்கள் பல்வேறு அளவிலான காயங்களுடன் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விபத்தின் தாக்கத்தால் குடோனில் இருந்த பட்டாசு மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் முழுமையாக எரிந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மாரனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை உரிய உரிமம் மற்றும் பாதுகாப்பு அனுமதிகளுடன் இயங்கியதா, நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெடிமருந்து மூலப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததா, பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா, தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகாசி இந்தியாவின் முக்கிய பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் நிலையில், அங்கு அவ்வப்போது ஏற்படும் வெடி விபத்துகள் தொடர்ந்து உயிரிழப்புகளையும் பெரும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த சோக சம்பவம் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிகளை மேலும் கடுமையாக அமல்படுத்த வேண்டும், வழக்கமான ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும், பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்படும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இந்த விபத்து சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Source link