தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகமாக இருந்தவர் தான் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு தொடங்கி 1999-ம் ஆண்டுவரை பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவின் உயரிய அந்தஸ்தை பெற்ற சிவாஜி, பராசக்தி படத்திற்கு பிறகு, பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் வில்லன், குணச்சித்திரம், என பலதரப்பட்ட கேரக்டர்களில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது முதல் படமான பராசக்தி படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு தொடங்கி தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா வரை பல இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். நடிப்பு என்றால் சிவாஜி தான். அவரின் நடிப்பை தான் இன்றைய நடிகர்கள் பின்பற்றி வருவதாக பலரும் கூறி வருகின்றனர். நடிப்புக்கு பெயர் பெற்ற சிவாஜி சவாலியே விருதை பெற்றிருந்தாலும் கூட, தனது நடிப்பை பார்க்க என் ரசிகன் தியேட்டருக்கு வரமாட்டான், என் நடையை பார்க்கத்தான் வருவான் என்று அவரே ஒரு இயக்குனரிடம் கூறியுள்ளார்.
படத்திற்கு படம் நடிப்பில் வித்தியாசம் காட்டி இருந்தாலும், தமிழ் சினிமாவில் பலரும் அறியப்படாத ஸ்டைலிஷ் மன்னன் என்றால் அது சிவாஜி கணேசன் தான். ஒரு கட்டத்தில் ஹீரோ என்பதை கடந்து முக்கிய கேரக்டர்களில் நடிக்க தொடங்கிய சிவாஜி கணேசன், கடைசியாக நடித்து வெளியான படம் பூப்பறிக்க வருகிறோம் திரைப்படம் தான். 1999-ம் ஆண்டே படையப்பா படம் வெளியாகி இருந்தாலும், இந்த ஏப்ரல் மாதம் வெளியானது. பூப்பறிக்க வருகிறோம் செப்டம்பர் மாதம் வெளியானது.
விஜய் நடிப்பில் செல்வா, பகவதி ஆகிய படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கிய இந்த படத்தில் வந்த எட்டில் அழகு பாடல் வரவேற்பை பெற்றது. விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் மாளவிகா நாயகியாக நடித்திருந்தார். ரகுவரன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த சிவாஜி நடித்த கடைசி படத்திற்கு வித்யாசகர் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சிவாஜியின் பெருந்தன்மையான நடிப்பு குறித்து இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
சிவாஜியிடம் கதை சொல்லி, ஷூட்டிங் தொடங்கியது. முதல் நாளே செட்டுக்குள் வந்துவிட்டார். அவர் வநததால், எப்படி எடுக்கப்போகிறோம் என்ற படபடப்பு எனக்குள் இருந்தது வியர்த்து கொட்டியது. முதல் காட்சி ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் சொன்னேன். அவரும் நடித்து முடித்தார். எனக்கு ஓகேவா என்று கேட்டார் நான் ஓகே, உங்களுக்கு எதும் இருந்தால் நீங்கள் இன்னொருமுறை பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவர் மீண்டும் உங்களுக்கு ஓகேவா என்று என்னிடம் கேட்டார். நான் அருகில் சென்றபோதும் அதே கேள்வியை திரும்பவும் கேட்டார்.
அப்போது நான் எனக்கு 100 சதவீதம் ஓகே, உங்களுக்கு மீண்டும் ஒருமுறை பண்ண வேண்டும் என்றால் பண்ணுங்கள் என்று சொன்னேன். அவர் எனக்கும் ஓகே என்று சொன்னார். அதன்பிறகு ஷூட்டிங் போக போக, நாங்கள் நெருக்கமானோம். அப்போது அவரிடம் முதல் நாள் ஏன் உங்களுக்கு ஓகேவா என்று கேட்டீர்கள் என்று கேட்டேன். பஅதற்கு அவர், புதிதாக ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்கிறோம். அவருக்கு திருப்தி தரும் அளவுக்கு நடக்க வேண்டும் என்று எனக்கு பயம் அதனால் தான் கேட்டேன். புது இயக்குனர் என்றாலும் உனக்கு வேண்டியதை நான் கொடுக்க வேண்டும் அல்லவா என்று கேட்டார்.
அன்று சிவாஜி சார் கேட்ட அந்த கேள்வி எனக்கு வாழ்நாளில் கிடைத்த படிப்பினை என்று ஏ.வெங்கடேஷ் பெருமையாக பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
