பீஜிங்: திபெத்தில், சீனா கட்டி வரும் பிரமாண்ட அணையால் நம் நாட்டில் பிரம்மபுத்திரா நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக திபெத் உள்ளது. அங்கு யர்லுங் தசாங்போ என்ற நதி பாய்கிறது. திபெத்தில் உற்பத்தியாகும் அந்த நதி, நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தில் நுழையும்போது, பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது.
தற்போது அந்த நதியின் குறுக்கே, 1,600 கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை சீனா கட்டி வருகிறது. திபெத்தின் தென்கிழக்கில் இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லைக்கு அருகில் உள்ள மோடோக் என்ற ஆழமான பள்ளத்தாக்கு பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அணை கட்டப்பட்டால், நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன அறிவியல் அகாடமி மற்றும் யுனான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த, 1325 முதல் 2020ம் ஆண்டு வரையிலான, யர்லுங் தசாங்போ நதியின் நீர்வரத்து வரலாற்றை ஆய்வு செய்து, அவர்கள் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, உலகின் மிகப்பெரிய அணை என்பதால், அதில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அணையில் அபாய அளவைத் தாண்டி நீர் தேங்கி இருக்கும்போது, அதிக மழை பெய்தால் மதகுகள் திடீரென திறக்கப்படலாம். அப்படி ஒரே நேரத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர், கீழ்நோக்கி உள்ள இந்தியா மற்றும் வங்கதேச பகுதி மக்களை அதிரடியாக தாக்கும்.
உலக சராசரியை விட இரு மடங்கு வேகமாக திபெத் பீடபூமி வெப்பமடைந்து வருவதால் அங்குள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட மிக வேகமாக உருகி, சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்டதைப் போன்ற பெருவெள்ளம் ஏற்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த அணை கட்டப்படும் இடம் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி என்பதாலும் அணைக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது சீன ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
