கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து சீமான் வெளியிட்ட பதிவுக்குத் விசிக முக்கிய நிர்வாகியும் சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு பதிலடி கொடுத்து விமர்சித்து உள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சியினர் கைது செய்யப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாகியுள்ளது. இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் ஆதரவுக்குரல் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
ஆதரவு தெரிவித்த தலைவர்களுக்கு சீமான் நன்றி
கார்த்திகா உள்ளிட்ட கட்சியினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.
அந்தப் பதிவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்புவது சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் சீமான் தெரிவித்திருந்தார். அடக்குமுறைகள் வீழ்ந்து சனநாயகம் வெல்ல வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சீமானின் பதிவுக்கு வன்னி அரசு பதில்
சீமானின் இந்தப் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில், திமுகவைச் சேர்ந்த வன்னி அரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.அந்தப் பதிவில், சீமானின் அரசியல் நிலைப்பாடு, அவர் முன்வைக்கும் கருத்துகள் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, சீமானின் அரசியல் அணுகுமுறை குறித்த தனது எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் பதிவு விவரம் பின்வருமாறு,
ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
திரு. சீமான் அவர்கள்.
இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என
வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.
அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் திரு.சீமான்.
திராவிடக்கோட்பாட்டையும்
சனாதன எதிர்ப்பையும்
அரசியல்
படுத்தியவர்
பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்.
அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும்
திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் திரு.சீமான்.
அதுமட்டுமல்ல,
கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால்,
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த
பார்ப்பனிய அடிமை தான் திரு.சீமான்.
இப்படி கோட்பாட்டு வழியிலும்
தனிநபர் தாக்குதலிலும்
ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை
திமுக மறந்திருக்கலாம்.
விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை
தந்தை பெரியாரையும்
புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும்.
பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.
இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை;
நாதகவுக்கும் வெட்கமில்லை என பதிவு
கார்த்திகா கைது விவகாரத்தில் சீமான் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவைச் சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்த நிலையில், அதற்குப் பதிலாக வன்னி அரசு விமர்சனங்களை முன்வைத்திருப்பது இந்த விவகாரத்தில் புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
