டெல்லி: முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதவி விலகியதை அடுத்து மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைக்கு வரும் நவம்பர் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் அக்டோபர் 26ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை (notification) வெளியாகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 2, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவ.3 ஆம் தேதி செய்யப்படும்.
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 5ஆம் தேதியாகும். வாக்குப் பதிவு நடைபெறும் நாள் நவம்பர் 12. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நவம்பர் 16-ஆம் தேதிக்குள் தேர்தல் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். இவர் மத்திய இணையமைச்சராகவும் இருந்தார். இந்த நிலையில் அவர் தனது பதவியை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
இதனால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ராஜினாமா செய்த எல்.முருகனின் பதவிக்காலம் 2030 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 வரை இருந்தது.
தற்போது இந்த காலியான இடத்திற்கு மத்திய பிரதேசத்தில் இருந்தே யாரேனும் போட்டியிடுவார்களா, இல்லை தமிழகத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
