சீமான் குறித்து அவதூறு : யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு!

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘யூடியூபரும் திரைப்பட விமர்சகருமான பிஸ்மி தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.100 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் இது போல் தொடர்ச்சியாக அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருகிறார். அதே போல் சீமானை நக்கல் நையாண்டியுடன் அவரது படங்களை மார்பிங் செய்து பேசி வருகிறார். எனவே யூடியூபர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது வழக்குப்பதிவு செய்யப் போலீசிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 

எனவே சீமான் மீது அவதூறு பரப்பும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பி வரும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி இந்த மனு மீதான விசாரணை நீதிபதி விக்டோரியா கெளரி அமர்வில் நேற்று (28-07-26) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த அவர், “தேர்தலில் வெற்றி தோல்வி என்பது அப்பாற்பட்டது. ஆனால், தமிழகத்திற்குச் சீமான் ஒரு தவிர்க்க முடியாத தலைவர். முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்.எல்.ஏவை உடனே வழக்குப்பதிந்து காவல்துறை கைது செய்தது. ஆனால் சீமான் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?” என கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து மனுதாரர் தரப்பில், ‘பழனி நிலம் பத்திரப்பதிவு விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தொடர்பாக வீடியோ வெளியிட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என வாதிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதி விக்டோரியா கெளரி, “ஏன் இந்த விவகாரத்தில் மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? ஒரு தலைவர் குறித்து அவதூறாகவோ அல்லது அசிங்கமாகவோ பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது. இன்றைக்குள் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அகற்றி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அது குறித்து அறிக்கையை நாளை (அதாவது இன்று) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என மதுரை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.07.2026) நீதிபதி விக்டோரியா கௌரி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் இருவர் மீதும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா  சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

மேலும், இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டார். 

Source link