சீமை கருவேல மரங்கள் அகற்றம்: ‘வைகோவைப் பின்பற்றுங்கள்’: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும் நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கும் முக்கியக் காரணமாக இருக்கும் சீமை கருவேல மரங்களை ஒழிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வெள்ளிக் கிழமை (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது.

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு முக்கிய வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. 

அதன் விவரம்;

”அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு (NGOs) 24 மணி நேரத்திற்குள் உரிய அனுமதி வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து தீவிரமாக அமல்படுத்த வருவாய்த்துறைச் செயலாளரை  நோடல் அதிகாரியாக நியமனம் செய்கிறோம். நியமிக்கப்பட்ட வருவாய்த்துறைச் செயலாளர் ஜூலை 31-ஆம் தேதி நேரில் ஆஜராகி, கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகளின் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும்.

மரங்களை அகற்றும் பணிகளைத் தொய்வின்றி விரைவாகச் செயல்படுத்த தமிழக அரசு போதுமான பிரத்யேக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

மனுதாரர் வைகோவைப் பின்பற்றி, சீமை கருவேல மரங்களை அகற்றும் களப்பணிகளில் தன்னார்வலர்களும் பொதுமக்களும் நேரடியாகக் களம் இறங்க வேண்டும்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

நீதிமன்றத்தில் வைகோ முன்வைத்த வாதங்கள்:

விசாரணையின் போது வைகோ நேரில் ஆஜராகித் தனது வாதங்களை முன்வைத்தார்:

”தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகளுடனும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடனும் இணைந்து சீமை கருவேல மரங்களை அகற்றினோம். அப்போது மரங்களில் இருந்து வெளியான வாயு காரணமாகத் எனது தொண்டை மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டது.

சில இடங்களில் பொதுமக்களும் தன்னார்வலர்களும் மரங்களை அகற்ற முன்வந்தாலும், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியரின் தலையீட்டிற்குப் பிறகே அனுமதி கிடைக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை” என்று வைகோ குற்றம்சாட்டினார்

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 90% சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், வட மாவட்டங்களில் மட்டுமே சிறு சுணக்கம் நிலவுவதாகவும் விளக்கம் அளித்தார்.

இருப்பினும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுக்களுடன் அரசுத் துறைச் செயலாளர்கள் முறையான கூட்டங்களை நடத்தாதது குறித்து நீதிபதிகள் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்தனர். இதன் காரணமாகவே வருவாய்த்துறைச் செயலாளரை முதன்மை நோடல் அதிகாரியாக நியமித்து, பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

Source link