தமிழில் தற்போது சினிமா நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக 90-ஸ் கிட்ஸ்கள் மத்தியில் வில்லியாக கலக்கிய பழைய நடிகைகள் தற்போது சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை பிருந்தா தாஸ்க்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு. சன் டி.வியில் கடந்த 2003-ம் ஆண்டு முதல், 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் முக்கிய வில்லி கேரக்டரில் நடித்து அசத்தியவர் தான் பிருந்தா தாஸ். 1000-க்கு மேற்பட்ட எபிசோடுகளை கொண்ட ஆனந்தம் சீரயலில், சுகன்யா நாயகியாக நடித்திருந்தார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த சீரியலை தயாரித்திருந்தது.
குடும்பத்தில் நடக்கும் சிக்கல்கள், குடும்ப உறவுகள், பாசப்பிணைப்புகள், அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியலில், டெல்லி குமார், கமலேஷ், பிருந்தா தாஸ், வட்சலா ராஜகோபால், சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 90எஸ் குழந்தைகளின் ஃபேவரேட் சீரியலான இந்த ஆனந்தம் சீரியலில், அபிராமி என்ற வில்லி கேரக்டரில் பிருந்தா தாஸ் நடித்திருந்தார். இந்த சீரியலில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்துள்ள பிருந்தா தாஸ் ஆனந்தம்’ சீரியல் மட்டுமல்லாமல், ‘கல்யாணம்’, ‘ரேகா ஐபிஎஸ்’ உள்ளிட்ட சீரியலில் நடித்திருந்தார். அதேபோல், ‘ஹாய் டா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிருந்தா தாஸ், தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் வரிசையில் இணைந்தார். ஒரு பரதநாட்டிய கலைஞரான இவர், தனது சகோதரி உடன் சேர்ந்து பி-போர்ஸ் (B Force) அமைப்பை தொடங்கி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
தற்போது பிருந்தா தாஸ், கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவ்வப்போது சமூகலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரது மகன் கிஷன் தாஸ் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ‘முதல் நீ முடிவும் நீ’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், யூடியூபராகவும், சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சராகவும் இருந்து வருகிறார்.
2019-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான கிஷன் தாஸ், அடுத்து சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நண்பராக நடித்திருந்தார். அதன்பிறகு தருணம் என்ற படத்தில் நடித்திருந்த அவர், கடந்த ஆண்டு வெளியான ஆரோமலே படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராகவும் அறிமுகமானார். தற்போது ஈரப்பதம், காற்று மழை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
