சுற்றி வளைத்த கேமராக்கள்; ஆமை வேகத்தில் நகர்ந்த வாகனங்கள்: நடிகை திரிஷா ரோடு ஷோவால் ஸ்தம்பித்த கோவை

கோவையில் நடைபெற்ற தனியார் கைபேசி (மொபைல்) கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வந்த பிரபல நடிகை திரிஷா, திறப்பு விழாவைத் தொடர்ந்து ரோடு ஷோ சென்று ரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள நூறடி சாலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட தனியார் கைபேசி கடையை நடிகை திரிஷா திறந்து வைத்தார். அவரது வருகையைக் கேள்விப்பட்ட 500-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் பொதுமக்களும் கடையின் முன்பாகக் கூடினர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினரும் பவுன்சர்களும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

நடிகை திரிஷா கடைக்கு வருகை தந்தபோது, அவரை அருகில் காண்பதற்காக அங்கே கூடியிருந்த ரசிகர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் முன்னெக்கி வந்தனர். இதன் காரணமாக அங்கே பெரும் கூட்ட நெரிசல் உருவானது. பவுன்சர்களும் காவல்துறையினரும் மிகவும் சிரமப்பட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தித் தடுத்தனர்.

கடை திறப்பு விழாவை இனிதே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்படும் வேளையில், நடிகை திரிஷா காருக்குள் இருந்தவாறே ரசிகர்களையும் பொதுமக்களையும் பார்த்து கையசைத்தார். மேலும், இதய வடிவக் குறியீட்டைக் காட்டியும், சிலருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தும் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு ரோடு ஷோ போன்று சென்று அவர்களை உற்சாகப்படுத்தினார்.

முன்னதாக, அங்கே திரண்டிருந்த ரசிகர்களிடம் பேச விரும்பிய நடிகை திரிஷா ஒலிபெருக்கியைப் (மைக்) பயன்படுத்திப் பேச முயன்றார். இருப்பினும், அந்த ஒலிபெருக்கி சரிவர இயங்காததால், அவரால் பேச முடியாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link