–நமது நிருபர்–: ‘‘விதிமீறும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (அக்.,27) சுற்றுச்சூழல் துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது. காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை அமைச்சர் ராஜீவ் ஆய்வு செய்தார்.
சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்திராஜன், பொதுச்செயலாளர் முருகசாமி, பொருளாளர் மாதேஸ்வரன் ஆகியோர், அமைச்சரிடம் அளித்த மனுவில், ‘‘சாய ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் இயக்க அனுமதி, விரிவாக்க அனுமதி விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து ஆணை வழங்க வேண்டும்; சுத்திகரிப்பு மையங்களில் தேங்கியுள்ள 1.5 லட்சம் டன் அடர் கலவை உப்புக் கழிவுகளை அகற்றக் கூடுதல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும், ரசாயன, உயிரியல் கழிவுகளை முறையாக அகற்றவும், உப்புநீரிலிருந்து துணைப் பொருள்கள் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’’ என்றனர்.
அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆறுகளில் நுரை ஏற்படுவதற்கு சாக்கடை கழிவுநீர் கலப்பதே முக்கியக் காரணம். சாய ஆலைத் துறையினர் முன்வைத்துள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனங்களுக்கு அரசு பாதுகாவலனாக இருக்கும்; விதிமீறும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
