நமது நிருபர்
பழநி கோவில் நில மோசடி வழக்கில், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமி மடம் உள்ளது. இம்மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.40 ஏக்கர் நிலத்தை மோசடியாக திருப்பூர் மாவட்டம், உடுமலை பாப்பான்குளம் வெள்ளத்துரை, பழனி ஆயக்குடி டி.கே.என்.புதுார் சேதுபதி ஆகிய இருவருக்கு ஜூலை 6ல், 2 கோடி ரூபாய்க்கு கிரயமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
பழநி அடிவாரம் போலீசார் விசாரித்த இவ்வழக்கு, டி.ஜி.பி., உத்தரவில் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., சஜிதா தலைமையில் டி.எஸ்.பி., அஜய்தங்கம் மேற்பார்வையில், 5 இன்ஸ்., உள்ளிட்ட போலீசார் இவ்வழக்கை விசாரிக்கின்றனர். திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்தானலட்சுமி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
முக்கிய ஆவணங்கள்
இதில், போலீசார் விசாரணைக்கு உதவ நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் தனி தாசில்தார் சஞ்சய்காந்தி மற்றும் பழனி பறக்கும்படை தனி தாசில்தார் பிரசன்னா, ஆதிதிராவிடர் நலத்துறை சார் ஆய்வாளர் ரத்தினசாமி, ஒட்டன்சத்திரம் வட்ட வழங்கல் அலுவலர் உஷா, சர்வேயர் செல்லத்துரை ஆகியோரிடம் இருந்து இவ்வழக்கிற்கு தேவையான ஆவணங்களை பெற்று, பதிவு செய்தனர். தற்போது வழக்கு விசாரணை வேகம் பெற்று இருக்கிறது.
விசாரணை
திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ”விசாரணை அறிக்கை வந்த பிறகு குற்றம் செய்தவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
