எழுதியவர்: யஷஸ்வினி ஸ்ரீ
சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ள, இயக்குநர் வெங்கி அட்லூரி படத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, சூர்யா மற்றும் மமிதா பைஜு இடையேயான 20 வயது வித்தியாசம் கொண்ட காதல் கதையை திரையில் வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்று சூர்யாவே வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
சமீபத்திய பேட்டியில் பேசிய வெங்கி அட்லூரி, “சூர்யாவை இதற்கு முன்பு ரசிகர்கள் அதிகமாக பார்க்காத ஒரு குடும்பத் தலைவனாக இந்தப் படத்தில் காட்டியிருக்கிறேன். ‘கஜினி’ படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் ரசிகர்களை எப்படி கவர்ந்ததோ, அதேபோல் இந்தப் படத்திலும் அவரது தோற்றம் ரசிகர்களை ஈர்க்கும். மமிதா பைஜு இயல்பாகவே சிறப்பாக நடித்துள்ளார். பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கில் முடித்துவிட்டார் என்று பாராட்டினார்.
இந்தப் படத்தில் சூர்யா 42 வயதுடைய சர்வதேச பிஸ்டல் ஷூட்டிங் சாம்பியனான சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மமிதா பைஜு 22 வயதுடைய சுதந்திரமான மனப்பான்மை கொண்ட ‘மேடி’ என்ற இளம் பெண்ணாக நடித்துள்ளார். இந்தக் கதையில் பிஸ்டல் ஷூட்டிங் முக்கிய அம்சமாக இருந்தாலும், அதுவே கதையின் மையம் அல்ல என்று இயக்குநர் விளக்கினார்.
“படத்தில் பிஸ்டல் ஷூட்டிங் இரண்டாவது அடுக்கு மட்டுமே. உண்மையில் சஞ்சய் விஸ்வநாத் மற்றும் மேடி இடையேயான உறவுதான் கதையின் மையக்கரு. கதையின் மிகவும் பேசப்படும் அம்சம் இந்த 20 வயது இடைவெளி கொண்ட காதல்தான். 20 வயது வித்தியாசம் சிலருக்கு ஒரு கற்பனையாக இருக்கலாம்; மற்றவர்களுக்கு அது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கலாம். இந்த இரு பார்வைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் கிளைமாக்ஸை வடிவமைத்துள்ளேன். அதனால் ஒவ்வொருவரும் தங்களுக்கான பதிலைப் பெறுவார்கள்.
இன்றைய காலத்தில் நடிகர்கள் தங்களது வயதையே திரையில் குறிப்பிட விரும்புவதில்லை. ஆனால் சூர்யா சார், ’20 வயது வித்தியாசம் என்பதை தெளிவாகக் காட்டுங்கள். அப்போதுதான் உளவியல் ரீதியாக அந்த உறவின் தாக்கம் பார்வையாளர்களுக்கு சரியாகப் புரியும்’ என்று சொன்னார். இந்த விஷயத்தில் எனக்கிருந்த தயக்கத்தை விட அவரின் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அதிகமாக இருந்தது. இளம் தலைமுறை இந்த உறவை எப்படி பார்க்கிறது என்பதை அறிய அவர் பல ஜென்சி இளைஞர்களிடம் கருத்து கேட்டோம். “15 அல்லது 20 வயது வித்தியாசம், 40 வயது என்ற விஷயம் இன்றைய இளைஞர்களுக்கு பெரிதாகத் தோன்றவில்லை. ‘வயது என்பது ஒரு எண் மட்டுமே’ என்றே அவர்கள் கூறினர்.
2024-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற மமிதா பைஜு, தற்போது விஜயுடன் ‘ஜன நாயகன்’ படத்திலும் நடித்துள்ளார். “மமிதா மிகவும் திறமையான நடிகை. தன்னைப் பற்றிய எந்த தயக்கமும் அவருக்கு இல்லை. பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கில் முடித்தார், திரையில் சூர்யா – மமிதா இருவரும் இரண்டு சிவப்பு ஆப்பிள்களைப் போல அழகாகத் தெரிந்தார்கள். பார்க்கவே கண்களுக்கு விருந்தாக இருந்தது. இந்தக் கதைக்கேற்ற நடிகர்களை இந்த திரைக்கதை தானாகவே தேர்ந்தெடுத்தது போல இருந்தது. இருவரும் காட்சிகளில் இயல்பாகவே புதுமைகளை சேர்த்து நடித்தார்கள்,.
தென்னிந்திய திரைப்படங்களில் வழக்கமாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடைபெறும் நிலையில், இந்தப் படம் முழுக்க தமிழில் மட்டுமே எடுக்கப்பட்டு பின்னர் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது. “இது நேரடி தமிழ்ப் படம். தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்குவது தேவையில்லாமல் படப்பிடிப்பு காலத்தை நீட்டிக்கும். எனவே ஒரு மொழியைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. எனது முதன்மை ரசிகர்கள் தமிழர்கள்.
மேலும், நடிகர்களும் தமிழில் மிகவும் இயல்பாக நடித்தனர். தமிழில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம். படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை, தமிழ் வசனங்களை மட்டுமே மாற்றினோம். “திரைக்கதையின் ஆன்மா அப்படியே பாதுகாக்கப்பட்டது. ஆரம்பம் முதல் இறுதி வரை படத்திடம் நேர்மையாக இருந்தோம். தமிழ் வசனங்களுக்கென தனி எழுத்தாளர் குழுவும் பணியாற்றியது. இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் முக்கிய இடம் கொடுத்திருக்கிறோம். “காமெடி எழுதுவதுதான் மிகவும் கடினமான வேலை. முதலில் எழுதும்போது நகைச்சுவையாகத் தோன்றும். மீண்டும் படிக்கும்போது அதே அளவு சிரிப்பைத் தராது. இந்தப் படத்தின் திரைக்கதையை எழுத மட்டும் மூன்று மாதங்கள் எடுத்தது என்று கூறியுள்ளார்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
