செக் மோசடி வழக்கு; நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்கள் கொடுத்த நடிகர்களில் ஒருவரான விமல், காசோலை மோசடி செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து, பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விமல். அதன்பிறகு சற்குணம் இயக்கிய களவானி படத்தின் மூலம் கவனிக்கப்படும் நடிகராக மாறிய இவர், தொடர்ந்து வாகை சூடவா, மஞ்சப்பை, கலகலப்பு, தூங்கா நகரம், கேடி பில்லா, கிள்ளாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் வடம் என்ற படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு வெளியான மன்னர் வகையறா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விமல், அந்த படத்தை தயாரித்திருந்தார். பூபதி பாண்டியன் இயக்கிய இந்த படம் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படம் தாயரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை திருப்பி கொடுக்காத விமல், இந்த தொகை்காக அவருக்கு காசோலை கொடுத்துள்ளார். வாங்கி கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்தது. 

இதையடுத்து பைனாஸ்சியர் கோபி நடிகர் விமல் மீது சென்னையில் உள்ள சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஏற்கனவே விமல் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விமலுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அதே சமயம், இந்த தீர்ப்பு வழங்கும்போது நடிகர் விமல் கோர்ட்டில் ஆஜராகி இருந்ததால், அவர் தரப்பில், மேல்முறையீட்டு செய்ய உள்ளதாகவும், அதனால், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

Source link