செங்கல்பட்டு அருகே கருங்குழியில் ரயில் சிக்னல் பேனல் வெடித்துச் சிதறியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், தென்மாவட்டங்களுக்கு இடையிலான விரைவு ரயில்கள் 4 மணி நேரம் தாமதமாக சென்றுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை கடந்து தான் செல்ல வேண்டும். அப்படி இருக்கும்போது இந்த பகுதிகளில் ஏதேனும் சிக்னல் கோளாறு அல்லது தண்டாவாள பிரச்னைகள் ஏற்பட்டால் ரயில் சேவை மொத்தமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், ரயில் சேவையில் சற்று பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில், நேற்று (அக்டோபர் 23) மாலை ரயில்வே சிக்னல் போர்டில் திடீரென புகை ஏற்பட்டு பழுதானது. இதனால், தென்மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி விரைவு ரயில் உட்பட சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆறு விரைவு ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டது. எழும்பூரில் இருந்து புறப்பட்ட ரயில்கள் அனைத்தும் கருங்குழியில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து கருங்குழி பகுதிக்கு வந்த ரயில்வே அதிகாரிகள், சிக்னல் போர்டில் ஏற்பட்ட பழுது குறித்து ஆய்வு செய்து, பழுதை சரி செய்தனர். இதனைத் தொடர்ந்து ரயில்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இந்த சிக்னல் பாதிப்பு காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 9 ரயில்கள் தாமதமாக சென்றது. குறிப்பாக திருச்செந்தூர், கன்னியாகுமரி, கொல்லம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் தாமதமாக சென்றது.
செங்கல்பட்டு பகுதியில் நடந்த இந்த சிக்னல் கோளாறு காரணமாக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605) ரயில் 2 மணி நேரம் 15 நிமிடங்கள், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) ரயில் 2 மணி நேரம் 45 நிமிடங்கள், கொல்லம் எக்ஸ்பிரஸ், 3 மணி நேரம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் 45 நிமிடங்கள், முத்துநகர் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 45 நிமிடங்கள், பொதிகை எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 48 நிமிடங்கள், நெல்லை எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 36 நிமிடங்கள், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 33 நிமிடங்கள் தாமதமாக சென்றது.
சென்னை புறநகர் ரயில் சேவையும் இந்த சிக்னல் கோளாறால் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற ரயில்கள் 2-3 மணி நேரம் தாமதமாக சென்றதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
