செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான வழக்கு: தகவல் தெரிவிக்க அவசர எண் வெளியீடு – 16 நாட்களாக விலகாத மர்மம் – gingee girl hemalatha missing case emergency contact number released

செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் தகவல் தெரிவிக்க அவசர எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதி ஆலம்பூண்டியைச் சேர்ந்த ஹேமலதா என்ற ஏழு வயது சிறுமி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி காணாமல் போனார். தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு தாயின் அருகே படுத்து உறங்கிய சிறுமி, அதிகாலையில் மாயமாகியிருக்கிறார். 16 நாட்களாகச் சிறுமி எங்கிருக்கிறார் என்பது குறித்த எந்தவிதத் தடயமும் கிடைக்கவில்லை.

மட்டுமின்றி, இந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 10 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர்.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள சூழலில், இந்த வழக்கு போலீஸாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கக்கூடிய சூழலில், தொடர்ந்து குழந்தைகள் மாயமாவது பெற்றோர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுமிக்கு என்ன நடந்தது?

அக்டோபர் 11ஆம் தேதி இரவு பெற்றோருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, அதிகாலையில் காணாமல் போயிருக்கிறார். பாட்டி மற்றும் தனது அம்மாவுடன் உறங்கிய அவர் எங்கு சென்றார் என்பது குறித்து இதுவரை எந்தத் தடயமும் இல்லை.

மேலும், அதிகாலை நேரத்தில், அம்மா, அம்மா எனச் சிறுமி அலறுவது போன்ற சத்தம் மட்டும் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தவிர வேறு எந்தவிதமான மேற்பட்ட தகவலும் தற்போது வரை தெரியவில்லை.

சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் உட்பட பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

14 இடங்களில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு

சிறுமியைக் கண்டறிவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகள் குறித்தும் போலீஸாரும் தனிப்படை போலீஸாரும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலம்பூண்டியைச் சேர்ந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 14 இடங்களில் இருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், 600 செல்போன் எண்களை டிரேஸ் செய்து, அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செஞ்சி அருகே குழந்தை காணாமல் போன விவகாரம்…இறங்கி அடிக்கும் திமுக

சிறுமி குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்க அவசர எண்

இந்தச் சூழலில், சிறுமி காணாமல் போன சம்பவத்தில் அவரைக் குறித்த ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்க அவசர எண் வெளியிடப்பட்டிருக்கிறது.

87 54 99 26 33 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link