கரூரிலேயே விஜய்யை போட்டிருந்தால்! இந்த நிலை வந்திருக்குமா? ஆவேசமாக கேட்ட திமுக கவுன்சிலர் தலைமறைவு?

சென்னை: கரூரிலேயே விஜய்யை போட்டிருந்தால் (கதையை முடித்திருந்தால்) இந்த நிலைமை வந்திருக்குமா என புழல் சிறை வாசலில் அன்பில் மகேஷிடம் ஆவேசமாக கேட்ட வேலூர் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீஸார் தேடி வருகிறார்கள். உண்மையிலேயே அப்படி ஒரு திட்டம் இருந்ததா என்பது குறித்தும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனராம்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுத்த வழக்கில் ரூ 100 கோடி மோசடி செய்ததாக கிடைத்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவில் 12.30 மணிக்கு புழல் சிறையில் அடைக்க அழைத்து வரப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திமுகவினர் புழல் சிறை முன்பு அன்பில் அழைத்து வரப்பட்ட போலீஸ் வேனை வழிமறித்து தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் அவரை அழைத்து செல்ல விடாமல் பலர் வாகனத்தை தடுத்தனர்.

இதையடுத்து போலீஸார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு சிறைக்குள் அன்பிலை அழைத்துச் சென்றனர். அப்போது ஒருவர், தலைவரே கரூரில் வைத்து விஜய்யை போட்டிருந்தால் (கதையை முடித்திருந்தால்), இந்த நிலை வந்திருக்குமா? என ஒருமையில் ஆவேசமாக அன்பிலை நோக்கி கூச்சலிட்டார்.

அவர் யார் என்பதை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் வேலூர் மாவட்டம் 12 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் என தெரியவந்தது. அவர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர் என்றும் அவரது தீவிர ஆதரவாளர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ளதாக சொல்லப்படும் டீட்டா சரவணனை போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர் மீது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டும் தொனியில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த டீட்டா சரவணனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சட்டசபையில் முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மிரட்டியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் காவிரி பிரச்சினையின் போது ஒரு நடிகையின் பெயரை குறிப்பிட்டு ஆபாசமாக பேசியதாக முன்னாள் துணை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க ரூ 100 கோடி மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதன் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி சங்க தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் ஏ1 குற்றவாளி அரசக்குமார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஏ2 குற்றவாளி முத்துக்குமார் தலைமறைவாக இருந்து வருகிறாராம். அவரை அன்பில் மகேஷ்தான் பாதுகாத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த நிலையில் அன்பில் மகேஷ் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின்படி கிடைத்த தகவலை வைத்து அன்பிலை காவலில் வைத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அன்பில் மகேஷ் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில் அது நேற்று காலை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மாலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரிடம் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு பின்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் அன்பில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு ஜாமீன் கோரி வில்சன் உள்ளிட்டோர் வாதிட்டனர். ஆனாலும் ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். இதையடுத்து அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.