சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்பொழுது முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் விஜய் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் நடவடிக்கையில் மும்மூரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டாஸ்மாக், மின்வாரிய ஊழல் வழக்குகள்
மேலும் டாஸ்மாக்கில் ஆயிரம் ரூபாய் கோடி ஊழல் மற்றும் மின்வாரியத்துறையில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியத்தில் ரூபாய் 397 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறி செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டு ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில், இருவரும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.
செந்தில் பாலாஜி வீட்டில் DVAC சோதனை
அவர்களிடம் துணை காவல் ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான உயர்மட்ட காவல் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சூழலில், கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 7 மணியளவில் தொடங்கிய இந்த சோதனையில், போலீஸ் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதேபோல், மண்மங்கலம் அருகே அமைந்துள்ள அவரது பூர்வீக வீடு, உதவியாளர் சுப்பிரமணியின் வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரனின் வீடு, கோதைநகர் பகுதியில் உள்ள கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பின்னணி என்ன?
மொத்தம் ஐந்து இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், கரூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பரிசோதித்து வருகின்றனர். சில ஆவணங்கள் மற்றும் கணினி பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சோதனையின் போது செந்தில் பாலாஜியின் பெற்றோரிடமும் அதிகாரிகள் பல்வேறு தகவல்களை கேட்டு விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த சோதனை எந்த வழக்கின் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
தற்போது பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சோதனைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. சோதனை முடிவடைந்த பிறகே அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள், சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் இந்த நடவடிக்கைக்கான காரணம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் நடைபெற்றுள்ள இந்த திடீர் சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
