சென்னை: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேரை, 15 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை, திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார் (18). பச்சையப்பன் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதே கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு மாணவராக உள்ளார். இருவரும் நேற்று காலை கல்லூரி செல்வதற்காக, ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர்.
அங்கிருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக நடந்து சென்றபோது, திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த சுமார் 15 பேர் கொண்ட கும்பல், இருவரையும் வழிமறித்து சரமாரியாக வெட்டியது.
இந்த தாக்குதலில், நிதிஷ்குமார் மற்றும் 17 வயது மாணவர் இருவருக்கும் தலை உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக, பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரியமேடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து சென்று, காயமடைந்த மாணவர்கள் இருவரையும் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, பெரியமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்த கல்லூரியைச் சேர்ந்தவர்கள், ரூட் தல விவகாரத்தில் தாக்குதல் நடைபெற்றதா? அல்லது முன்விரோதம் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
