சென்னையில் இன்று (அக்டோபர் 18) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை செல்போன்களில் அலாரம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் மாலை நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பொதுமக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தச் செய்தியில், “சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கவனம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்த வானிலை மாற்றங்கள் மழைப்பொழிவை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாகப் பெய்த மழை, அதன்பிறகு இரவு முழுவதும் விட்டுவிட்டுப் பெய்தது. மேகங்கள் ஒரே பகுதியில் திரண்டு காணப்பட்டதால் குறுகிய நேரத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது, போக்குவரத்து பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Daily weather Briefing 18-10-2026 The Wet spell with isolated heavy to very heavy rainfall likely to continue over Tamil Nadu, Puducherry & Karaikal till 24th; over Coastal Andhra Pradesh & Yanam, Rayalaseema and South Interior Karnataka on 18th and isolated heavy rainfall also likely to continue over Kerala & Mahe, South Interior Karnataka till 24th; Coastal Andhra Pradesh & Yanam and Rayalaseema till 21st October, 2026. https://t.co/lv77mUP4lR
— India Meteorological Department (@Indiametdept) October 18, 2026
அக்டோபர் 24 வரை மழை நீடிக்க வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 24ஆம் தேதி வரை மழை தொடரக்கூடும். சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், ராயலசீமா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் அக்டோபர் 18ஆம் தேதி மழை பெய்யக்கூடும். கேரளா, மாஹே மற்றும் தெற்கு உள் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் அக்டோபர் 24ஆம் தேதி வரை மழைப்பொழிவு நீடிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் நேரங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரில் இறங்காமல் இருப்பது, மின்கம்பிகள் மற்றும் அறுந்து விழுந்த மின்கம்பிகளிலிருந்து விலகி இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். வானிலை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
