சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை: கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை நிலவரம் எவ்வளவு? விவரம் இதோ – chennai heavy downpour maximum of 13.5 cm recorded in vadapalani

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் கடந்த 24 மணி நேரமாகப் பரவலாகக் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 20.10.2026 காலை 08:30 மணி முதல் 21.10.2026 காலை 08:30 மணி வரையிலான காலகட்டத்தில் பதிவான மழை அளவுகளின் விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளன.சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாகப் பெய்த மழை அளவுகளின் விவரம் பின்வருமாறு:

சென்னையில் கனமழை வடபழனி மழை அளவு

வடபழனி: அதிகபட்சமாக 13.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி முதலிடத்தில் உள்ளது. சைதாப்பேட்டை: 12.7 சென்டிமீட்டர் ம ழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கம்: 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது மடிப்பாக்கம்: 11.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுரவாயல்: 11.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வளசரவாக்கம்: 11.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நெற்குன்றம்: 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம்: 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடையாறு: 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.சென்னையின் முக்கியப் பகுதிகளான வடபழனி, சைதாப்பேட்டை மற்றும்மீனம்பாக்கம்ஆகியவற்றில் 12 சென்டிமீட்டருக்கும் அதிகமாகக் கனமழை பதிவாகியுள்ளது. அதேபோல, மடிப்பாக்கம், மதுரவாயல், வளசரவாக்கம், நெற்குன்றம் போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் 11 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. நகரின் மையப்பகுதிகளான நுங்கம்பாக்கம் மற்றும் அடையாறிலும் தலா 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மாநகராட்சி நடவடிக்கை

தொடர்ந்து பெய்து வரும் இந்தக் கனமழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் நிவாரணக் குழுவினர் முடுக்கி விடப்பட்டுத் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை மேலும் தொடர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துமாநகராட்சி ஆணையர் சமீரன் கூறுகையில், கடந்த நள்ளிரவு முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, தாடிகிராமம், சைதாப்பேட்டை, வடபழனி, மதுரவாயல், ஆலந்தூர், மீனம்பாக்கம், அடையாறு மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக ஆணையர் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாகச் நகரின் சராசரி மழை அளவு 7.3 செ.மீ (73 மி.மீ) ஆக உள்ளது.

நீர் தேக்கம் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு

சில பகுதிகளில் லேசான அளவில் மழைநீர் தேங்கியிருந்தாலும், ஜோன்ஸ் சாலை, கங்க ரெட்டி சாலை மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட சில இடங்களில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. காலையில் போக்குவரத்து பாதிக்கப்படாதவாறு அனைத்துச் சாலைகளும் சீரமைக்கப்பட்டு முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளுக்காகவும், நிவாரணப் பணிகளுக்காகவும் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில் முகாமிட்டுப் பணிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றனர். நேற்றைய இரவு வரை பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை.

தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ள சூழலை எதிர்கொள்ளத் தேவையான கூடுதல் மோட்டார்கள், கூடுதல் பணியாளர்கள் மற்றும் சிறப்பு மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அவசியமான நேரங்களில் மாநகராட்சியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மக்கள் தேவையின்றி வெளியே வரவோ, மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் நிற்கவோ,புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link