நமது நிருபர்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. 20க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.
கோல்கட்டாவில் இருந்து 184 பயணியருடன் சென்னை வந்த ‘இண்டிகோ’ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
மும்பை, பெங்களூரு, டில்லி, மதுரை, திருச்சி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. பின் மழை ஓய்ந்ததும், ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின.
சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, பிராங்க்பர்ட், அபுதாபி செல்லும் சர்வதேச விமானங்கள் மற்றும் திருச்சி, டில்லி, மும்பை, பெங்களூரு செல்லும் விமானங்கள், ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ‘போர்டிக்கோ’ பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், பயணியர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
